சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளின் உடைமைகளை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒக்லே ஜாக்சன் (22) என்பவர், இந்த விமானத்தில் சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல வந்தார்.
அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஒக்லே ஜாக்சன், அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் என்றும், அமெரிக்காவில் சாட்டிலைட் போனுக்கு தடை எதுவும் கிடையாது என்றும் கூறினார். டெல்லிக்கும் சாட்டிலைட் போனுடன் தான் வந்ததாகவும் அங்கு யாரும் தடுக்கவில்லை என்று கூறினார்.
இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்தனர். மேலும், சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஒக்லே ஜாக்சனை சென்னை விமான நிலைய போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்தபடி சாட்டிலைட் போன் மூலமாக அவர் யாருடன் பேசியுள்ளார், என்று ஆய்வு செய்து வருகின்றனர்.