திருவனந்தபுரம்: நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவாவை சேர்ந்தவர் அலியார் ஷா சலீம் (28). கொச்சியில் உள்ள ஒரு ஐடி பார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பானர்ஜி ரோட்டில் உள்ள ஒரு மது பாருக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது பாரில் இருந்த ஒரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அலியார் ஷா சலீம், தனது காரில் புறப்பட்டு சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், அலியார் ஷாவின் காரை வழிமறித்தது. பின்னர் அவரை காரில் இருந்து இறக்கி அந்த கும்பல் தங்களுடைய காரில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.
இது குறித்து அலியார் ஷா சலீம் கொச்சி வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்தனர். அப்போது அலியார் ஷாவை தாக்கியது எர்ணாகுளத்தை சேர்ந்த ரஞ்சித், அனீஷ், சோனா என்ற இளம்பெண் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தன்னை தாக்கிய கும்பலில் பிரபல நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக அலியார் ஷா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இத்டணியே தாக்குதல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.