டெல்லி: அதானி நிறுவனம் பற்றி எழுத 4 பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியது. அதானி மற்றும் அவரின் நிறுவனங்களுக்கு எதிரான சமூக ஊடக பதிவுகளை நீக்க வேண்டும் என்று டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் அதானிக்கு எதிரான சமூக ஊடக வீடியோக்களை நீக்க உத்தரவிட்டனர். அதானி வழக்கறிஞரின் வாதங்களை மட்டுமே கேட்டதோடு, எதிர்மனு தார்களின் வாதத்தை கேட்காமல் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே இதனை எதிர்த்து எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பரஞ்ஜாய் குஹா, ரவி நாயர், அபிர் தாஸ் குப்தா உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர்; அவசர அவசரமாக பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன? 2024 ஜூன் மாதம் முதலே அதானி நிறுவனம் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள் பொதுவெளியில் உள்ளன. அதானி குறித்த ஒரு கட்டுரை கென்யா நாட்டு அரசு தெரிவித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
கென்யா அரசும், சுவிட்சர்லாந்து நீதிமன்றமும் அறியாமையில் தீர்ப்பளித்துள்ளதா? பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் முகவர்களாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான் என்று வாதிட்டார். தொடர்ந்து 4 பத்திரிகையாளர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி நிறுவனம் பற்றி பத்திரிகையாளர்கள் ரவி நாயர், ஆபிர் தாஸ் குப்தா, அயஸ்காந்த் தாஸ், ஆயுஷ் ஜோஷி எழுத விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனங்கள் குறித்த கட்டுரைகள் பல காலமாக பொதுவெளியில் காணப்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கும் முன்பு அவர்களது கருத்தை கீழமை நீதிமன்றம் கேட்காதது தவறு. பொதுவெளியில் இருந்து வரும் அதானி நிறுவனங்கள் குறித்த கட்டுரைகளை அகற்றக் கூறியதும் தவறு என்றும் கூறினார்.