தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் தடை உத்தரவை மீறி மீன்பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து, மீன்களை பறிமுதல் செய்தனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீனவர்கள் சிலர் தடை உத்தரவை மீறி கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாகவும், பிடித்த மீன்களை மார்க்கெட்டில் விற்பதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து இன்று காலை தொண்டி மீன்மார்கெட்டில் மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர் மற்றும் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, கடலில் தடையை மீறி பிடித்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர். தடை உத்தரவை மீறி கடலுக்கு செல்லக்கூடாது எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது மீனவர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி மீன் பிடிக்க செல்வோருக்கு அபதாரம் விதிக்கப்படும். மேலும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அரசின் நிவாரண உதவிகளும் நிறுத்தப்படும்’ என எச்சரிக்கை விடுத்தனர்.


