Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தன்னம்பிக்கையை வளர்க்கும் பம்பர விளையாட்டு

பம்பரக்கட்டையில் கயிற்றைச் சுற்றிச் சுழற்றி விடுவதே பம்பர விளையாட்டாகும். பம்பரம் விளையாடும் வழக்கம் சிற்றூர் சிறுவர்களிடம் மட்டுமின்றி நகரங்களிலும் புதிதாக தோன்றிய புறநகர்ப் பகுதிகளிலும் பார்க்கமுடியும்.

விளையாடும் முறை: இது அனைத்துச் சிறுவர்களாலும் விளையாட இயலாது சற்று திறமையான சிறுவர்களால் மட்டுமே விளையாட இயலும். சுமார் ஐந்து அடி நீளமுள்ள கயிற்றை பம்பரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள படிப்படியான வரிகள்மீது சுற்றிய பிறகு கயிற்றின் ஒரு நுனியைப் பிடித்து சுழற்றி விட வேண்டும். முறையாக சுழற்றவில்லை எனில் பம்பரம் சுழலாது. சுழற்றுவதில் இரண்டு முறைகள் உள்ளன. சாட்டையைச் சுழற்றுவது போல் சுழற்றிவிடுவது, முன்னோக்கி பம்பரத்தை விட்டு கைகளை பின்னோக்கி இழுப்பது என இரண்டு முறைகளில் பம்பரத்தை சுழற்றிவிடுவர்.

ஒரு சிலர் இந்த இரு முறைகளையும் கற்று வைத்திருப்பர். ஒருசிலர் ஏதேனும் ஒரு முறையை மட்டும் தெரிந்து வைத்திருப்பர். கயிற்றை பம்பரத்தில் சுற்றுவதற்கும்கூட ஒற்றை மாராக்கு, மூக்கணாங்கயிறு என இரு முறைகளில் சுற்றுவர்.

நான்கு அல்லது ஐந்து சிறுவர்கள் பம்பரத்தோடு ஒன்றுகூடும்போது அனைவரும் தங்களது பம்பரங்களை சுழற்றிவிட்டு யாருடைய பம்பரம் அதிக நேரம் சுற்றுகிறது என கண்டு மகிழ்வர். ஒருசிலரின் பம்பரம் வேகமாகவும் அதிக நேரமும் சுற்றும். அந்தப் பம்பரத்தை உறங்குகிறது என்று கூறுவர்.

விதிமுறைகள்: இந்த விளையாட்டிலும் சில விதிமுறைகளை வைத்துள்ளனர். பம்பர விளையாட்டில் வல்லாக்கு குத்து, காட்டுக்குத்து என இரண்டு முறைகள் உள்ளன. காட்டுக்குத்து என்பது காட்டு ஆக்கர், காட்டு வாக்கு என்றும் ஒரு சில பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது.

வகைகள்: வல்லாக்கு முறையில், சிறு வட்டம் ஒன்றை வரைந்து அதன் நடுவில் ஒரு சக்கை வைக்கப்படும். விளையாடக்கூடிய சிறுவர்கள் அந்த வட்டத்தைச் சுற்றி நின்று, தங்கள் பம்பரங்களை ஒரே நேரத்தில், ‘ஜூட்’ சொல்லி சுழற்றத் தொடங்குவர். பம்பரம் சக்கையில் பட்டு வட்டத்தை விட்டு வெளியில் சுற்றியபடி வரவேண்டும். ஒரு சிலருடைய பம்பரம் மட்டுமே அவ்வாறு வரும். ஒருசில பம்பரங்கள் வட்டத்தின் உள்ளேயே சுற்றிக்கொண்டோ சுற்றாமலோ கிடக்கும். வட்டத்தினுள் சுற்றிக்கொண்டிருந்தால் கைகளால் வட்டத்தை விட்டு வெளியே தள்ளியும் விடலாம். இத்தகைய முயற்சிகள் செய்தும் வட்டத்தை விட்டு வெளிவராத பம்பரங்களை வட்டத்தினுள் வைத்துவிட வேண்டும்.

அவ்வாறு வைக்கப்பட்ட பம்பரங்களை மற்ற சிறுவர்கள் தங்கள் பம்பரங்களால் சுழற்றி வெளியேற்ற வேண்டும். அப்போது உள்ளிருக்கும் பம்பரம் உடைந்து போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உள்ளிருக்கும் பம்பரத்திற்கு உரிய சிறுவனின் மனம் திக் திக் என்று பய உணர்வுகளால் நிரம்பியிருக்கும். பம்பரம் உடைபடாமல் வட்டத்துக்கு வெளியில் வந்துவிடுமானால் அவன் மற்றவர்களைப்போல் சுழற்றி விளையாடலாம்.

வட்டத்தை விட்டு பம்பரம் வெளியில் வந்ததும் சுற்றிக்கொண்டிருக்கும் பம்பரத்தை கயிற்றின் உதவியால் மேலே தூக்கி உள்ளங்கையால் தாங்கி பிடித்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகும் உள்ளங்கையில் பம்பரம் சுழலும். இது சிறுவர்களிடம் காணப்படும் திறமையை வெளிப்படுத்தும் செயல். அவ்வாறு கீழே விழாமல் உள்ளங்கையில் சுழல வைத்துவிட்டால் அந்த சிறுவனின் முகம் மகிழ்ச்சியால் மலரும்.

காட்டுக்குத்து ஆட்டம் விளையாடுவதற்கு சுமார் ஐந்து அடி இடைவெளியில் எதிரெதிராக இரு இணைகோடுகள் கிழிக்கப்படும். அனைவரும் பம்பரத்தை தரையில் சுழற்றிவிட்டு, பின்பு கயிற்றின் உதவியால் பம்பரத்தை மேலே தூக்கி உள்ளங்கையில் சுழலச்செய்ய வேண்டும். அவ்வாறு சுழலச்செய்ய முடியாதவர்கள் தங்கள் பம்பரத்தை ஒரு கோட்டில் வைத்துவிட வேண்டும். மற்றவர்கள் அந்தப் பம்பரத்தை தங்கள் பம்பரத்தால் நகர்த்தி எதிர் கோட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி நகர்த்தும்போது பம்பரத்திற்கு ஆணிக்குத்து நிறைய விழும். எதிர்க் கோடுதான் காடு என குறிக்கப்படும். காட்டுக்கு வந்ததும் அதனைக் கொண்டு வந்தவன் தன் பம்பரத்தால் அவன் பம்பரத்தில் ஐந்து முறை குத்திக் கொடுப்பான். இதுதான் ஆட்டத்தில் தோற்றவனுக்கான தண்டனையாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்ட பம்பரக்காரனுக்கு அந்த குத்துக்கள் மீண்டும் விழாத அளவுக்கு விளையாட வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கும்.

விளையாடும் காலம்: பம்பரம் விளையாடுவதை தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் காணமுடியும். மாசி மகம் பங்குனி, உத்திரம் போன்ற திரு விழாக்களில் மிகுதியாக பம்பரம் விற்பனையாகும். சிற்றூர்களில் சிறுவர்களின் பெற்றோர் பம்பரம் செய்து கொடுப்பதும் உண்டு.

இலக்கியக் குறிப்புகள்: பம்பரம் விளையாடுவது பற்றிய குறிப்புகள் இராமாயணம், கந்தபுராணம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் புதிய பம்பரம் ஆடுமால் என்ற பிரபுலிங்கலீலை பாடல் பம்பர விளையாட்டு பற்றி குறிப்பிடுகிறது.

பயன்கள்: சிறுவர்களுக்கு பொழுது போக்காக இருப்பதோடு திறமை, தன்னம்பிக்கையை வளர்க்கவும் இந்த விளையாட்டு உதவுகிறது.

- புகழேந்தி