குறுகிய நாட்களில் இவ்வளவு கோடி பேரை எப்படி சேர்ப்பீர்கள் வாயில் வடை சுடுவது சுலபம் அதை செயல்படுத்துவது கடினம்: எஸ்ஐஆர் பற்றி அமைச்சர் பிடிஆர் விளாசல்
மதுரை: வாயில் வடை சுடுவது சுலபம், எஸ்ஐஆர் செயல்படுத்துவது கடினம் என அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமாக கூறியுள்ளார். மதுரை, ஆரப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாமை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் குறை இருக்கின்றது. 4 தேர்தலில் அனுபவம் பெற்றவன் நான். தேர்தல் விதிமுறைகளை பற்றி ஆய்வு செய்து தெளிவு பெற்றவன் நான். ஆர்.கே நகர் பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையே 30 ஆயிரம் வாக்காளர்களை நீக்கினர்.
அதில் 2,800க்கு மேல் போலி வாக்காளர்களும், ஒரே அட்டையில் பல்வேறு குழப்பங்களும் இருந்ததை கண்டறிந்து தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தோம். ஒரு காலகட்டத்தில் மாநகரங்களில் வாக்கு சதவீதம் அதிகமாகவும், புறநகர் பகுதிகளில் குறைவாகவும் இருந்தது. இப்போது மாநகரங்களில் குறைவாகவும், புறநகர்களில் அதிகமாகவும் உள்ளது. நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேவைப்படும் ஒன்று தான். ஏற்கனவே பலமுறை நடந்திருந்தாலும் இந்த முறை எதிர்ப்பதற்கு 3 காரணங்கள் உள்ளது.
4 மாதத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசரம் என்ன? எஸ்ஐஆர் திருத்தம் மேற்கொள்வதாக இருந்தால் முன்பாகவே படிவத்தை தயார் செய்து அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்த பின் அறிவித்திருக்க வேண்டாமா? அறிவித்த பிறகு விண்ணப்பம் அடித்துள்ளீர்கள். அறிவித்த பிறகு பயிற்சி ெகாடுக்கிறீர்கள். அறிவித்த பிறகு யார் பிஎல்ஓவாக இருக்க வேண்டுமென தேர்வு செய்கிறீர்கள். யார் கண்காணிக்க வேண்டுமென தேர்வு செய்கிறீர்கள்.
பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எப்படி வாய்க்கு வந்ததை பேசிவிட்டு அதன் பிறகு பணத்தை அச்சிட்டது, ஏடிஎம் இயந்திரத்தை மாற்றியது என செயல்பட்டார்களோ, அதைப் போல ஆசைக்காக ஒன்றை அறிவித்துவிட்டு செயல்பாட்டில் கவலைப்படாமல் உள்ளனர் என்ற கவலையும், வேதனையும் உள்ளது. 2002ல் புறநகரிலும், 2005ல் மாநகரங்களிலும் நடந்த எஸ்ஐஆரில் உங்கள் பெயர் இருந்தால், புது போட்டோ மட்டும் போடுங்க. கையெழுத்து போட்டால் தானாகவே ஆகிவிடும் என்கின்றனர். ஆனால், மக்கள் தொகையும் சரி, தொகுதி வரையறையும் சரி நிறைய மாறியுள்ளது.
உதாரணத்திற்கு மதுரை மத்திய தொகுதியில் கடந்த 2005ல் வாக்காளர் எண்ணிக்கை 1.40 லட்சம் தான் இருந்தது. இன்று 2.40 லட்சம் பேர் உள்ள நிலையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு எப்படி வாக்கு கிடைக்கும்? 2005ல் மதுரை வடக்கு என ஒரு தொகுதியே கிடையாது. 2011 மறுவரையில் தான் வந்தது. இதுபான்ற சூழலில் எப்படி 30 நாட்களில் எஸ்ஐஆர் பணிகளை முடிப்பீர்கள். விண்ணப்பம், ஆட்கள், அவர்களது பயிற்சி என எதுவுமே போதவில்லை. எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் முழு நேரமாக இந்த பணிகளை செய்பவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் வேறு பணியில் உள்ளனர். இது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பணி. குறுகிய நாட்களில், குறைந்த பயிற்சியுடன், இவ்வளவு கோடி பேரை எப்படி சேர்ப்பீர்கள்? வாயில் வடை சுடுவது சுலபம். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று இறைவன் போல நினைத்தால் அது செயல்பாட்டுக்கு சாத்தியம் அல்ல. இவ்வாறு தெரிவித்தார்.
* ‘நியாயமாக செய்தால் டிஜிட்டலைஸ் செய்யுங்கள்’
‘தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுவதாக இருந்தால் வாக்காளர் பட்டியலை டிஜிட்டலைஸ் செய்ய வேண்டும். டிஜிட்டலைஸ் செய்யாமல் ஒளிந்து மறைந்து இரவில் பணிகளை பார்ப்பதால் தான் சந்தேகம் வருகின்றது. அவர்களுடைய சக்தி உண்மை மேல் இருக்கின்ற கனவா அல்லது மக்களை ஒதுக்க வேண்டும் என்ற கனவா?’ என்று அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
