*ஆய்வு நடத்த கோரிக்கை
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் தீபாவளியை முன்னிட்டு தரமான முறையில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
மேலும் தீபாவளி நெருங்க, நெருங்க வரும் நாட்களில் துணிகள் வாங்க கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தற்போது முதலே பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க கடை வீதிகளுக்கு வந்து செல்கின்றனர்.கடந்த வார இறுதி நாட்களான கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டி நகரில் பட்டாசு, துணிமணிகளை தேர்ந்ெதடுத்து வாங்கினர்.
தலை தீபாவளி கொண்டாடும் தம்பதிகளின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கினர். கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்களை நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தீபாவளி பண்டிகையில் புத்தாடைகளுக்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிப்பது பட்டாசும், சுவீட்டும் தான்.
ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நண்பர்கள், விருந்தினர்களுக்கு சுவீட் வழங்குவதற்காக சுவீட் கடைகளில் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் ஸ்வீட், கார வகைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவு இனிப்பு மற்றும் காரம் விற்பனையாகும் என்பதால், இதனை பயன்படுத்தி தரமற்ற இனிப்புகள் மற்றும் கார பொருட்கள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
எனவே ஊட்டி, குன்னூர் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி மற்றும் கடைகளில் தரமான முறையில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்கப்படுகிறதா? என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.