Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பக்ராம் விமான தளத்தை எங்ககிட்ட கொடுங்க:அமெரிக்கா எச்சரிக்கை: தலிபான் மறுப்பு

ஜலாலாபாத்: அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பின்னர் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்றதுடன், அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டன.

இதனிடையே, டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்திலேயே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வௌியேறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து 2021ம் ஆண்டு ஜோ பைடன் ஆட்சியின்போது ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வௌியேறின. தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ய பிறகு பக்ராம் விமான தளத்தில் இருந்த அமெரிக்க வீரர்கள் அனைவரும் வௌியேறினர்.

இந்நிலையில் பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த விமான தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வௌ்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பக்ராம் விமான தளம் உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்தது. மேலும், சீனா அணு ஆயுதங்களை தயாரிக்கும் இடத்தை ஒரு மணி நேரத்திலேயே அடையக்கூடிய தொலைவில் பக்ராம் விமான தளம் உள்ளதால் அது முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஜோ பைடன் விட்டு கொடுத்திருக்க கூடாது.

பைடன் திறமையற்றவர். அந்த விமான தளத்தை அமெரிக்காவிடம் தாலிபன் அரசு ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப்பின் கோரிக்கைக்கு தலிபான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலிபான் தலைமை செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தன் எக்ஸ் பதிவில், “யதார்த்தவாதம் மற்றும் பகுத்தறிவு கொள்கையை அமெரிக்கா ஏற்று கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மிக முக்கியமானது என்பதை அனைத்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போதும் அமெரிக்காவுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது. மேலும், தோஹா ஒப்பந்தத்தின்கீழ், ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்துக்கு எதிராகவோ, அல்லது அதன் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்ததை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்கா தன் உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்” என கூறி உள்ளார்.