Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏராளமான கொலை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ-பிளஸ் ரவுடி சீர்காழி சத்யா பின்னணி என்ன? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: ஏராளமான கொலைகள், ஆள் கடத்தல், கொலை முயற்சி என தமிழ்நாட்டையே கதி கலங்க வைத்த கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா முதல்முறையாக போலீசில் பிடிபட்டுள்ளார். ரவுடி சத்யா, கொடூர கொலையாளியாக மாறியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கூலிப்படையினர், ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது ஏ-பிளஸ் ரவுடிகளை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு பயங்கர ரவுடியான சீர்காழி சத்யா வந்திருப்பதாக செங்கல்பட்டு எஸ்பி சாய் ப்ரனீத்துக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தி சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர். அதில் சீர்காழி சத்யா கொடூரக் கொலையாளி என்பதால், அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீர்காழி சத்யாவின் சொந்த ஊர் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் சாலை. அப்பா, அம்மா இருவருமே கூலி தொழிலாளிகள். சத்யாவுக்கு படிப்பு வரவில்லை. 8ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அருகில் உள்ள ஆத்தூரில் பிரபல சாராய வியாபாரி கண்ணையாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அப்போது கண்ணையாவுக்கும், மணல்மேடு சங்கர், கேபிரியேல் ஆகியோருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

அதில் கண்ணையாவின் கூட்டாளி ராஜலிங்கத்தை, மணல்மேடு சங்கரின் ஆட்கள் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப் பழியாக சங்கரின் ஆள் அஞ்சப்பனை, கண்ணையாவின் ஆட்கள் படுகொலை செய்தனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக கேபிரியேலின் கூட்டாளி டெலிபோன் ரவியை, சீர்காழி சத்யா மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து 2005ம் ஆண்டு படுகொலை செய்தனர்.அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குள் நடந்த மோதலில், கண்ணையா கொலை செய்யப்பட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சீர்காழி சத்யா, வல்லம்படுகை சந்திரனின் கூட்டாளியாக சேர்ந்தார். பின்னர் மீன்சுருட்டி சிற்றரசு, குடவாசல் ராஜேந்திரன் ஆகியோருடனும் கூட்டணி சேர்ந்தார். குடவாசல் ராஜேந்திரனுக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் நிலப் பிரச்னை ஏற்பட்டது. அதில் குடவாசல் ராஜேந்திரனுக்காக 2006ல் இரண்டு கொலைகளை செய்தார். பின்னர் 2011ல் திருச்சி புல்லம்பாடியில் முருகேசன், 2012ல் திண்டுக்கலில் ஜாபர் என்பவரை படுகொலை செய்தார்.

2013ம் ஆண்டு காரைக்காலில் ராமு என்பவரை குடவாசல் ராஜேந்திரனுக்காக கொலை செய்தார். அதைத் தொடர்ந்து சீர்காழி சத்யா, பெரிய ரவுடியாக வலம் வரத் தொடங்கினார். அதன்பின்னர் 2014ல் சிதம்பரம் அண்ணாமலை நகரில் ஒரு திருமண மண்டபத்துக்குள் புகுந்து, மணமகனாக இருந்த ஆம்புலன்ஸ் ராஜா மற்றும் மணமகளை வெட்டி தனியாக தலையை எடுத்துச் சென்ற சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் அந்த நேரத்தில் பெரும் பரபரப்பையும், பீதியையும் உருவாக்கியது. அதுமுதல், சீர்காழி சத்யா என்றால் ரவுடிகளே நடுங்க ஆரம்பித்தனர்.

பின்னர் தமிழகத்தில் தற்போது நம்பர் 1 ரவுடியாக வலம் வரும் திண்டுக்கல் மோகன்ராமிடம் கூட்டாளியாக சேர்ந்தார். 2015ம் ஆண்டு சூலூரில் வக்கீல் ஒருவரின் அண்ணன் மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேர் என 3 பேரை நடுரோட்டில், பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்தனர்.

இந்தக் கொலைகளுக்குப் பிறகு திண்டுக்கல் மோகன்ராம், சீர்காழி சத்யா என்றால் தமிழகத்தில் உள்ள அத்தனை ரவுடிகளும் பீதியில் உறைய ஆரம்பித்தனர். அதன்பின்னர் நரிக்குடியில் பன்னீர் என்பவரை படுகொலை செய்தனர்.

2017ல் சென்னை சங்கர் நகரில் சங்கர்லால் என்பவரை படுகொலை செய்தனர். அதன்பின்னரும் ஏராளமான படுகொலைகளை கூலிப்படையாக இருந்து நிகழ்த்தியுள்ளனர். சத்யா கூலிப்படை தலைவனாக மாறிய பிறகு, கூலிக்கு செய்யும் கொலைகளுக்கு யாராவது சில்லரை ரவுடிகள் சரண் அடைந்து விடுவார்கள். சத்யா மீது நேரடியான வழக்குகள் வராது. அதேபோல தமிழகம் முழுவதும் ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டாலும் துப்பாக்கி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்குவது போன்றவற்றால் பலர் புகார் செய்வதற்கே அஞ்சினார்கள்.

இதற்கு முன்பு இருந்த போலீஸ் அதிகாரிகள், ரவுடிகளையோ, கூலிப்படையினரையோ கைது செய்ய முன்வரவில்லை. தற்போதுதான் ரவுடிகளை ஒடுக்கும் படலம் தொடங்கியுள்ளதால், சீர்காழி சத்யா முதல் முறையாக போலீசில் சிக்கியுள்ளார். போலீசார் தன்னை பிடிக்க முயன்றதால்தான் தாக்குதலும் நடத்தியுள்ளார். அதில் போலீசார் திருப்பித் தாக்கும்போது துப்பாக்கி குண்டு காலில் பட்டுள்ளது.

போலீசார் கைது செய்யாததால், போலீசாரின் லத்தி ஒரு முறை கூட அவன் மீது பட்டதில்லை. தற்போது துப்பாக்கி குண்டு அவன் உடலில் பாய்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது இடத்தில் உள்ள ரவுடி சீர்காழி சத்யா போலீசில் சிக்கியது தமிழக ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

* நோ அரெஸ்ட்...ஒன்லி சரண்டர்...

தமிழகத்தில் பல கொடூர கொலைகளை செய்தாலும், ஒரு வழக்கில் கூட போலீசார், சீர்காழி சத்யாவை கைது செய்தது இல்லை. போலீசிலும் சத்யாவுக்கு ஆட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 20 வக்கீல்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவார். சிறைக்கு செல்வார். போலீசார் காவலில் எடுத்து விசாரித்தாலும் அடிக்க முடியாது. இதனால் மாப்பிள்ளை போல சரண்டராகி, மாமியார் வீட்டில் இருப்பதுபோல ஜெயிலில் இருந்து விட்டு, புது மாப்பிள்ளைபோல வெளியில் ஜாமீனில் வந்து சுற்றி வருவார். தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் தமிழகத்தில் இதுவரை வலம் வந்தார்.

* பாஜவில் உள்ள ரவுடிகள் 183 பொறுப்பில் மட்டும் 156 பேர்

பாஜவில் தற்போது தமிழகம் முழுவதும் 261 ரவுடிகள் சேர்ந்துள்ளனர். அதில் குற்றப்பதிவேடு உள்ள ரவுடிகள் மட்டும் 183 பேர். ரவுடிகளாக உள்ள 156 பேருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் மிகப் பெரிய ரவுடிகளாக சீர்காழி சத்யா, கே.ஆர்.வெங்கடேஷ் (ஓபிசி அணியின் மாநில செயலாளர்), அஞ்சலை (வடசென்னை மேற்கு மகளிர் அணியின் மாவட்ட செயலாளர்), படப்பை குணா (ஓபிசி அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்), சூர்யா (எஸ்.சி/எஸ்டி அணியின் மாநில செயலாளர்), ராஜா(எ)வசூல் ராஜா (விளையாட்டு அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்), கார்த்திக் (எ) கார்த்திகேயன் (ஓபிசி அணியின் மாநில செயலாளர்), அகோரம் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்), ராஜசேகர் (எ) எஸ்.ஆர்.தேவர் (மாநில துணை தலைவர்) ஆகியோர் முக்கியமானவர்கள்.