Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயிலும் இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் பொருளாதார தடையினால் உயர்கல்வியை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, கல்வி உதவித்தொகையை வழங்கினார். தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஒரு மாணவிக்கு ரூ.1,000 வீதம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மசூதிகள், தர்காக்கள் மற்றும் இதர வக்பு நிறுவனங்களில் பெரிய அளவிலான பழுதுபார்ப்பதற்கும் மற்றும் புனரமைப்பதற்கும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டு (2025-26) தொன்மையான 10 வக்பு நிறுவனங்களை பழுதுபார்த்து சீரமைக்க ரூ.10 கோடி மற்றும் பெரு மராமத்து மற்றும் பழுதுபார்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மசூதிகள் மற்றும் தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3 கோடியில் தொகுப்பு நிதியும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதார தடையினால் உயர்கல்வியை தொடர இயலாத இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ-மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தொடர ஏதுவாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் 2000 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தொடக்கமாக 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்பி கே.நவாஸ் கனி, தலைமை செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆசியா மரியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.