சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 940 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.
இதில், மொத்தம் 74,853 பயனாளிகள்(கர்ப்பிணிகள், பாலூட்டும் தார்மார்கள் (ம) 6 வயது வரை உள்ள குழந்தைகள்) பயன்பெற்று வருகின்றனர். இதில், மொத்தம் 5998 கர்ப்பிணிகள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் சமுதாய வளைகாப்பு விழா அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 250 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
கர்ப்பிணிப் பெண்கள் என்று தெரிந்தவுடன், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் பதிவு செய்து, மையத்தில் வழங்கப்படும் இணை உணவு (சத்துணவு மாவு) பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், மாதந்தோறும் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், கர்ப்ப காலத்தில் குறைந்தபட்சம் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் மருத்துவமனையில் மட்டுமே பிரசவம் மேற்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளுக்கு முறையான தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும், 6 மாதத்திற்கு பிறகு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் குழந்தையின் உயரம், எடை அளவிட்டு குழந்தைகள் சரியான வளர்ச்சியை பெற்றோர்கள் அறிந்து, குழந்தைகளுக்கு சரியான வளர்ச்சி தரும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், 3 வயது முதல் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்து முன்பருவ கல்வி பயில பெற்றோர்கள் தயார்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியமான உணவினை வழங்கி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் முயற்சி செய்வோம், என கர்ப்பிணி தாய்மார்களை, அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பா.கந்தன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.