எக்காலத்திலும் குழந்தை குழந்தைதான். நாம்தான் அவர்களுக்கு கண்ணாடி. நாம் என்ன செய்தாலும் அதை அப்படியே பின்பற்றி செய்யும் வழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. எனவேதான் குழந்தைகள் முன்பு சண்டை, மோசமான வார்த்தைகள் பயன்பாடு, ஆபாச செயல்பாடுகள் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களை நாம் கடைபிடித்தாலே குழந்தைகள் துவக்கத்தில் இருந்தே நல்ல மனிதர்களாக வளர்வார்கள்.
* குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை மனதில் ஆழமாக பதிந்து கொள்ள வேண்டும்.
* தேவையில்லாமல் அதிகாரக் குரலிலோ அல்லது அதட்டும் தொனியிலோ அவர்களிடம் பேசக்கூடாது.
* குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களைக் குறித்தே பேச்சை தொடங்க வேண்டும். இது மிகச் சுலபமாக அவர்களிடம் நெருக்கத்தை உண்டாக்கும்.
* அவர்களுக்கு தெரியாத விஷயங்களை கேட்டு, பார்த்தியா எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்ளக் கூடாது. அவர்களுடன் சேர்ந்து நாமும் கற்றுக் கொள்வது போல் அறிவை புகுத்த வேண்டும்.
* குழந்தைகளிடம் நம்முடைய ஈகோவை ஒருபோதும் காட்டவே கூடாது.
* குழந்தைகளிடம் தோற்றுப் போகப் பழக வேண்டும். விளையாட்டாக இருந்தாலும் சரி, கேள்வி பதிலாக இருந்தாலும் சரி.
* அடடா எனக்கு தெரியலையே… எங்கே நீ சொல்லு பாப்போம் என்று சொல்லிப் பாருங்கள். அதிகம் யோசிக்கப் பழகுவார்கள். குழந்தைகளுடன் விளையாடும்போது கீழே விழுவதைப் போலவோ, அழுவதைப் போலவோ பாவனை செய்து பாருங்கள். குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள்.
* அவர்கள் இருக்கும் சூழலைக் கவனித்து விளையாட்டுச் சாமான்கள், ஓவியம், சினிமா, கார்ட்டூன், அனிமேஷன் என்று வயதுக்கேற்ற விஷயங்களைப் பற்றி தெரியாத மாதிரி அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டுப் பாருங்கள். குழந்தைகள் உங்கள் மீது ஆர்வமாகி விடுவார்கள்.
* எப்போதும் அறிவுரைகளை ஒழுக விட்டுக் கொண்டே இருக்கும் பெரியவர்களை குழந்தைகளுக்குப் பிடிக்காது. அறிவுரை இல்லாமல், ஆலோசனைகளாக அல்லது நானும் செய்கிறேன் பாரேன் என அவர்களுடன் ஒன்றி செயல்பட வேண்டும்.
* அருகில் வரத்தயங்கும் குழந்தைகளை வலுக்கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் கவனிக்காத மாதிரி நம்மைக் கவனித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
* ஒரு குறிப்பிட்ட வயதுவரை புதியவர்களுக்கு முன்னால் அவர்கள் பால் ஈர்ப்பதற்காக குழந்தைகள் தங்களுடைய தனித் திறமைகளைக் காட்டி கொண்டே இருப்பார்கள். ஒருவேளை புதிதான நபரைக் கண்டால் ஓடி மறைகிறார்கள் எனில் வந்த நபரின் மேல் கவனம் தேவை. குழந்தை அவரிடம் நல்ல எண்ணம் கொண்டிருக்கவில்லை என அர்த்தம்.
* குட்டிக்கரணம் அடித்தல், பந்து விளையாடுதல், பேப்பரில் கிறுக்குவது, எல்லாவற்றையும் தூக்கி வீசுவது, போன்ற நடவடிக்கைகளை செய்வார்கள். அப்போது இதைச் செய்யாதே, இப்படிச் செய்யாதே என்று சொல்வதற்கு பதில் அவர்களை பாராட்டுவதை போல வழிப்படுத்த வேண்டும்.
* பல வீடுகளில் புதியவர்கள் முன்னால் நடித்துக் காட்டு, ஆடிக்காட்டு, பாடிக்காட்டு என்று பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். நாமும் சேர்ந்து வற்புறுத்தக் கூடாது.
* குழந்தைகளிடம் சிரித்துக் கொண்டே பேச வேண்டும். நம்முடைய முகத்தைப் பார்த்தே இவர் முசுடு என்று சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள். அருகிலேயே வரமாட்டார்கள்.
* அவர்களை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியையும் கேட்கக்கூடாது.
* குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு போகும்போது தின்பண்டங்களுடன் ஏதாவது ஒரு விளையாட்டுச் சாமான், அவர்கள் வயதுக்கேற்ற கதைப்புத்தகங்களை வாங்கிக் கொண்டு போக வேண்டும்.
* குழந்தைகளுடன் தரையில் உட்காருவதற்கோ, குனிந்து நிற்பதற்கோ, தயங்கக் கூடாது. எடுத்தவுடன் குழந்தைகளின் உடலைத் தொடுவது, தடவுவது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. குழந்தைகளுக்கு முற்றிலும் பிடிக்காது. அருவருப்பு கொள்வார்கள். குழந்தைகள், நாய்க்குட்டி, பூனைக் குட்டிகள் போல்தான். தூக்க முயற்சித்தால் ஓடுவார்கள், கைகளில் துள்ளுவார்கள். ஒருமுறை கீழே போட்டுவிட்டால் நம் மீது நம்பிக்கை வர வைப்பது கடினம்.
* உங்கள் அன்பை உடல்மொழியில், பார்வையில் பேச்சில் காட்ட வேண்டும்.
* முக்கியமாக குழந்தைகளுக்கு சொல்வதற்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். கதைகள் சொன்னால் அவர்களுக்குப் பிடித்தமானவர்களாகி விடுவார்கள். ஆனால் அதற்கு நீங்கள் கதை சொல்லப் பழக வேண்டும்.
* குழந்தைகளிடம் எதையும் பேசலாம், உரையாடலாம். ஆனால் அதற்கு அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக வேண்டும். சந்தித்த இரண்டு மூன்று நிமிடங்களிலேயே குழந்தைகள் அவர்கள் ஆளா இல்லையா என்று கண்டு பிடித்து விடுவார்கள்.
* மொத்தத்தில் குழந்தைகளிடம் பேசும்போது நம்முடைய முகமூடிகளைக் கழட்டிவிட வேண்டும். கொஞ்சம் கோமாளித்தனம், கொஞ்சம் வெகுளித்தனம், கொஞ்சம் விளையாட்டுத்தனம், நிறைய அன்பும் மகிழ்ச்சியும் வேண்டும்.
* குழந்தைகள் தனித்துவமானவர்கள். அவர்களுடன் நட்பும் அன்பும் கொள்வதென்பது அதிகாரத்தினாலல்ல, அன்பினால் நிகழ வேண்டும். அப்படி நடந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நம்மை மறக்க மாட்டார்கள்.
- எஸ். ரமணி, சிதம்பரம்