செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள லைவையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவரது மனைவி ஜோதி (20). இவர்களது ஒரு வயது மகனுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக ராட்டிங்கிணறு பகுதியில் உள்ள ெசங்கல்பட்டு அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர் பத்மநாபனுக்கு சொந்தமான கிளினிக்கில் சேர்த்துள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் பத்மநாபன், ‘’குழந்தைக்கு ஊசி போட்டுவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்துகுழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் தாயும் பாட்டியும் கொண்டு சென்றபோது குழந்தைக்கு வாயில் நுரை தள்ளியதால் இதுபற்றி டாக்டர் பத்மநாபனிடம் தெரிவித்துள்ளனர்.
அப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் பத்மநாபன் இல்லாததால், பிற மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது. ‘’டாக்டர் பத்மநாபனின் தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்தது’ என்று குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சென்று விசாரித்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


