திருவொற்றியூர்: மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில், புரட்டாசி மாத தேர் திருவிழா மற்றும் திருஏடு வாசிப்பு விழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெற்றது. தினமும் இரவில் அய்யா வைகுண்டர் காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்வான அய்யா திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பும், அதைதொடர்ந்து திருத்தேர் அலங்காரம் செய்தல் மற்றும் பணிவிடை நடைபெற்றது.
இதையடுத்து மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். விழாவில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, எர்ணாவூர் நாராயணன், தமிழிசை சவுந்தரராஜன், ஜெயதுரை, ஞானதிரவியம் எம்பி, அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் துரைப்பழம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.