தா யின் நோயை குணப்படுத்த புலியை தேடி வனத்துக்குள் சென்ற மணிகண்டனுக்கு சிவபெருமான் தரிசனம் அளித்தார். மணிகண்டனின் அவதார நோக்கம் திட்டமிட்டபடியே நடப்பதை உணர்ந்து கொண்டாலும், திருவிளையாடல் நிகழ்த்துவதில் மன்னர் அல்லவா? ஆகையால், எதுவுமே அறியாதது போல மணிகண்டனை பார்த்து, ‘நீ வனத்துக்குள் வந்த நோக்கம் என்ன’ என்றார். அதற்கு மணிகண்டன், ‘‘எனது தாய் தீராத தலைவலியால் அவதிப்படுகிறார்.
அவருக்கு புலிப்பால் அவசியம் வேண்டும். அதற்கு தாங்கள் உதவ முடியுமா’’ என்றான் மணிகண்டன். உடனே சிவபெருமான், ‘‘நிச்சயமாக. உனக்கு இந்திரனும், தேவர்களும் கட்டாயம் உதவுவார்கள்’’ என்று கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் இந்திரன் பெண் புலியாக உருமாறி வந்தார். அதன் மேல் அமர்ந்து கொண்டான் மணிகண்டன். தேவர்கள் ஆண் புலிகளாகவும் மாறி பின்தொடர்ந்து வந்தனர். புலிகளோடு பந்தளம் அரண்மனை நோக்கிச் சென்ற மணிகண்டனை கண்டு மக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலை கேள்விப்பட்ட மன்னர் ராஜசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மன்னரை கண்ட மணிகண்டன், ‘‘தாயின் தலைவலி மற்றும் நோய் தீர்க்க பெண் புலியோடு வந்துள்ளேன். புலிப்பாலை சேகரித்து தாயை குணப்படுத்தி விடலாம். கலங்காதீர்கள்’’ என்றான். தனக்காக வனத்துக்குள் சென்று புலியுடன் வந்த மணிகண்டனை கண்ட மகாராணி மனம் கலங்கினார். மன்னரிடம் தான் நாடகம் நடத்திய உண்மையை கூறினார். அமைச்சரின் சூழ்ச்சியால் இப்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் மனம் உடைந்த மன்னர், அமைச்சருக்கு தண்டனை தர முடிவு செய்தார். தடுத்த மணிகண்டன், ‘‘அமைச்சரை தண்டிக்க வேண்டாம். இறைவன் ஆணையிட்டபடியே அனைத்தும் நிகழ்ந்திருக்கிறது. நான் உங்களுடன் இருக்க வேண்டியது 12 ஆண்டுகள் மட்டுமே. அந்த வயதை எட்டி விட்டேன். என் பிறப்பிற்கான தேவையையும் நிறைவேற்றி விட்டேன். இனி இந்த அரண்மனை என் இருப்பிடம் அல்ல.
நான் தேவலோகம் செல்ல வேண்டும். என்னை வழியனுப்பி வையுங்கள் தந்தையே’’ என்றான். மகன் பிரிந்து செல்வதை அறிந்த மன்னர் ராஜசேகரன், மனம் கலங்கி கண்ணீர் விட்டார். அதனை கண்ட மணிகண்டன், ‘‘என் மீது நீங்கள் செலுத்திய அன்பு, பாசத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் என்னிடம் வரம் கேளுங்கள். தருகிறேன்’’ என்றார்.
மணிகண்டனை முதன்முதலாக கையில் தூக்கியபோது, முனிவர் கூறியது போலவே அனைத்தும் நடப்பதையும், தன் மகன் தெய்வீக அம்சமாக காட்சி தருவதையும் கண்டு மெய்சிலிர்த்தார் மன்னர் ராஜசேகரன். இறைவன் நிலையை அடைந்த மணிகண்டனிடம், மன்னர் ராஜசேகரன் ஒரேயொரு வரம் கேட்டார். அந்த ஒரு வரம்....? தரிசனம் தொடர்வோம்


