Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கம்: குமரி-சென்னைக்கும் வாராந்திர சிறப்பு ரயில், தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: பண்டிகை காலத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைகளை ஒட்டி தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெல்லை- செங்கல்பட்டு வாரம் இருமுறை சிறப்பு ரயில் (எண்.06154) வரும் 26, 28, அக்ேடாபர் 3,5, 10,12, 17,19, 24,26 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டிற்கு அதே நாளில் பிற்பகல் 1.15 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக செங்கல்பட்டு - நெல்லை வாரம் இருமுறை சிறப்பு ரயில் (எண்.06153) வரும் 26, 28, அக்ேடாபர் 3,5, 10,12, 17,19, 24,26 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.55 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 10 தினங்கள் இயக்கப்பட உள்ள இந்த ரயில்களானது, வந்தே பாரத் போன்று ஒரே நாளில் நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு சென்றுவிட்டு, அதேநாளில் மீண்டும் நெல்லைக்கு திரும்புவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், ஒரு ஏசி சேர் கார், 12 அமரும் வசதி கொண்ட சேர் கார், 4 பொதுபெட்டிகள், 2 மாற்றுதிறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயிலானது நெல்லையில் இருந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம் வழியாக செங்கல்பட்டை சென்று அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் இன்று (20ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06152) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயிலானது வரும் 22,29, அக்டோபர் 6,13,20 ஆகிய தேதிகளில் திங்கள் கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.18 மணிக்கு கோவில்பட்டிக்கும், 11.20 மணிக்கு நெல்லைக்கும், 11.43 மணிக்கு நாங்குநேரிக்கும், 11.54 மணிக்கு வள்ளியூருக்கும் வந்து சேரும். பின்னர் பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

மறுமார்க்கமாக கன்னியாகுமரி- சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06152) வரும் 23, 30, அக்டோபர் மாதம் 7,14,21 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு, வள்ளியூருக்கு மாலை 4.27 மணிக்கும், நாங்குநேரிக்கு மாலை 4.38 மணிக்கும், நெல்லைக்கு மாலை 5.10 மணிக்கும் வந்து சேரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு மறுதினம் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் போய் சேரும்.

இந்த ரயிலில் 2 ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 5 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 11 ஸ்லிப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும்.

* விழுப்புரம் - சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விழுப்புரம் ரயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இன்னும் சிறு, சிறு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழுப்புரம் - சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.