ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: 90 ஆயிரம் பேர் முன்பதிவு; போக்குவரத்து துறை தகவல்
சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,380 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 790 பேருந்துகளும், நாளை 565 பேருந்துகளும், திங்கட்கிழமை 190 பேருந்துகளும் மற்றும் செவ்வாய்க்கிழமை 885 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் இன்று மற்றும் நாளை 215 பேருந்துகளும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 185 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 145 பேருந்துகளும் 29 மற்றும் 30ம் தேதிகளில் 105 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அக்.4, 5ம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் 22,735 பயணிகளும் நாளை 14,415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை 11,908 பயணிகளும் திங்கட்கிழமை 8,070 பயணிகளும் மற்றும் செவ்வாய் அன்று 33,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை
போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு அக்.1 முதல் அக்.5 வரை பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிக கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’என்று கூறப்பட்டுள்ளது.
* திருப்பதி, குலசைக்கும்...
மேலும் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டிற்கான திருப்பதி திருமலையில் பிரமோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு கடந்த 22ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 6ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையையொட்டி கடந்த 23ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 3ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் மற்றும் கோவையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.1ம் தேதி முதல் அக்.3ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.