ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி உற்பத்தி பணிகள் மும்முரம்: எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் கிடைக்கவில்லை என உற்பத்தியாளர்கள் வேதனை
திருச்சி: ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாலையில் எழுந்து பொரியின் தரத்தை உறுதி செய்யும் வகையில் பலவிதமான வழிமுறைகளை தொழிலாளர்கள் கடைபிடித்து உற்பத்தி செய்கின்றனர். உப்பு மற்றும் லேசான இனிப்பு சுவையுடன் தயாரிக்கப்படும் இந்த பொரி மொறுமொறுப்பு தன்மை கொண்டதாகும்.
சாதாரண நாட்களை விட ஆயுத பூஜைக்கு பொரி விற்பனை களைகட்டும் என்பதால் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளனர். அரிசி மற்றும் விறகின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து விட்டதாகவும் முட்டை ரூ.530க்கு விற்பனையானால் தான் கட்டுப்படியாகும் என்றும் உற்பத்தியாளர்கள் கூறினார். இங்க தயாரிக்கப்படும் பொரி திருச்சி மாவட்டம் அல்லது நாகை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
ஆயுத பூஜைக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் ஆர்டர்கள் இன்னும் கிடைக்கவில்லை என பொரி உற்பத்தியாளர்கள் கூறினார். கடன் வாங்கி தொழில் நடத்திவரும் நிலையில், இதுபோன்ற சிறு தொழில்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.