அயோத்தியும் திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல பிரிவினைவாதத்தை மதுரை மக்கள் ஏற்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ்நாட்டில் 3,927 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில் ஆக்கிரமிப்பில் இருந்த 8,023 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடைய மதிப்பு ரூ.8,130 கோடி ஆகும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி ஆன்மிக ஆட்சியாக உள்ளது. மதுரை மக்கள் பிரிவினைவாதத்தை ஏற்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தீபத்திருவிழா பிரச்னையில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகின்றன. அயோத்தியும், திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல. இது திராவிட மண். அயோத்தி இல்லை. இங்கு பிரிவினைக்கு இடமில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வள்ளலார் மாநாடு விரைவில் நடத்தப்படும்.
கிருஷ்ண பரமாத்மா கையில் உள்ளது போன்று ஆட்சி சக்கரம் முதலமைச்சரின் கையில் உள்ளது. நல்லவைகளை ஏற்கும். தீயவைகளை அந்த ஆட்சி சக்கரம் அழிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் ஸ்ரீதர், இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* ஆட்சிக்கு அவப்பெயரை விளைவிக்க நினைக்கிறார்கள்
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை எண்ணற்ற திட்டங்களை பக்தர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் செய்து கொண்டிருப்பதால்தான் அற்ப மனம் கொண்டோர், எப்படியாவது ஆன்மிகத்திற்கும், இறையன்பர்களுக்கும், இந்த ஆட்சிக்கும் அவப்பெயரை விளைவிக்க நினைக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு, அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவித்து, அவரவர் விரும்புகின்ற வழிபாட்டை சுதந்திரமாகவும், முழு அமைதியோடும் மேற்கொள்ள திராவிட மாடல் அரசு உறுதுணையாக நிற்கும் என்றார்.


