Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாங்க திருடன் சார் இந்தாங்க அவார்ட்... பேக்கரியில் திருடியவருக்கு பொன்னாடை போர்த்திய உரிமையாளர்: கேரளாவில் ருசிகரம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள கடைக்காவூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஷ். இவர் அப்பகுதியில் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். பேக்கரியில் பொருட்கள் திருட்டு போவதை கண்டு பிடிப்பதற்காக கடைக்குள் இவர் கண்காணிப்பு கேமராவும் வைத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அனீஷ் தற்செயலாக கேமராவில் பதிவான காட்சிகளை சோதித்த போது ஒரு நபர் நைசாக 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை எடுத்து சட்டைக்குள் மறைத்து எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்தக் காட்சியை பார்த்தவுடன் அனீஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே ஆத்திரம் தணிந்த அனீஷ், அந்தத் திருடனுக்கு ஒரு வித்தியாசமான தண்டனையை கொடுக்க தீர்மானித்தார். அதன்படி தன்னுடைய கடையில் திருடிய அந்த ஆசாமியை கண்டுபிடிக்க அவர் தீர்மானித்தார். சற்று சிரமப்பட்டாலும் அந்த நபரின் போட்டோவை வைத்து அவருடைய முகவரியை கண்டு பிடித்தார். இதன்பிறகு ஒரு பொன்னாடையும், ஒரு விருதையும் ஏற்பாடு செய்து, தன்னுடைய மனைவி சுபாவையும் அழைத்துக்கொண்டு அந்தத் திருடனின் வீட்டை நோக்கி காரில் புறப்பட்டார். ஆனால் வழியிலேயே அந்த நபர் சாலையோரம் நடந்து செல்வது தெரியவந்தது. உடனடியாக காரை நிறுத்திய அனீஷ், அந்த நபரை அழைத்து தன்னுடைய கடையில் திருடியதற்காக கவுரவிப்பதாக கூறி அவருக்கு பொன்னாடை அணிவித்து மீசைமாதவன் என்ற விருதையும் கொடுத்தார்.

அந்த விருதில் அந்த வாலிபர் கடையில் திருடும் போது பதிவான புகைப்படமும் இருந்தது. முதலில் என்ன நடக்கிறது என்று அனீஷின் கடையில் திருடிய அந்த நபருக்கு புரியவில்லை. சிறிது நேரத்திற்கு பின்னர் தான் அனீஷின் பேக்கரியில் தான் திருடிய சம்பவம் அந்த நபருக்கு நினைவு வந்தது. இதை வீடியோவாக எடுத்து அனீஷ் தன்னுடைய முகநூலில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது. அனீஷின் இந்த செயலுக்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடையில் 500 ரூபாய் பொருளை திருடியதற்காக அந்த நபரை இப்படி அவமானப்படுத்தி இருக்க தேவையில்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் அனீஷ் கூறியது: முதலில் அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இனிமேல் அவருக்கு வேறு எங்கும் திருட மனம் வரக்கூடாது என்பதற்காகவே நான் இப்படி ஒரு திட்டத்தை அரங்கேற்றினேன். கடந்த 20 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் திலீப் நடித்த மீசைமாதவன் என்ற ஒரு படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்தப் படத்தில் திலீப் திருடனாக வருவார். அதனால் தான் மீசைமாதவன் என்ற விருதை அவருக்கு கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.