தீபாவளி பண்டிகை நெரிசலை தவிர்க்க மேம்பால கட்டுமான பணிகளை ஓரிரு வாரம் ஒத்திவைக்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு போக்குவரத்து கழகம் கடிதம்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மேம்பால கட்டுமான பணிகளை தற்காலிகமாக ஓரிரு வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கடிதம் எழுதியுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல அரசு போக்குவரத்து கழகம் மூலமாக சுமார் 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் வரும் 16ம் தேதி முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நகரத்தின் இயல்பு போக்குவரத்தை விட இரண்டு மடங்கு மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் அதிகமாக இருக்கக்கூடும். இந்நிலையில் போக்குவரத்து கழகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இந்தாண்டுக்கான தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் நடந்து வரும் மேம்பால பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்த கடித்தத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் சூழலில் நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக பல இடங்களில் சாலை அகலப்படுத்துவதும், மேல்பாலம் அமைப்பதும் போன்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, உளுந்தூர்பேட்டை முதல் சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி பாதைகளை கொண்டவையாகும். இந்த சாலைகளில் எந்த இடையூறும் இல்லாத போது பேருந்துகள் பெரியளவில் தாமதம் இன்றி இயக்கப்படுகின்றன. ஆனால், மேல்மருத்துவத்தூர் முதல் செங்கல்பட்டு இடையே கருங்குழி, படாளம், புக்கத்துறை என மூன்று இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிலோமீட்டர் தூரம் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் குறுகி இருப்பதால், பேருந்துகள், லாரிகள், கார்கள் போன்றவை நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் சூழல் உருவாகின்றன. அதேபோல், சென்னை - குமரி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் சில இடங்களில் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, இப்பணிகளை தற்காலிகமாக ஓரிரு வாரங்கள் ஒத்திவைக்கும்படி கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.