Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவின் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் தினசரி 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் உறுதி

சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் மற்றும் ஒன்றிய பொது மேலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மேலும் செயற்கை முறை கருவூட்டலில் சிறப்பாக செயல்பட்ட சங்கத்திற்கு பரிசுத்தொகையாக ₹ 10,000க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி கணிசமாக உயர்ந்து இருக்கிறது. ஆவின் பால் கொள்முதல் 35 லட்சத்தை எட்டியுள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தரத்திற்கு ஏற்ற விலை திட்டத்தை நிறைவேற்றியதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தனியார் பால் கொள்முதல் செய்வதை விட விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரை அதிகம் கொடுத்தும், கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக இன்றைக்கு பல நிர்வாக ரீதியான முன்னேற்றமும், பொருளாதாரத்தில் நல்ல சூழ்நிலையும் உருவாகியுள்ளது. ஆவின் விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டை விட 23 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக மொத்த விற்பனையாளர்கள் மூலமாக ஆவின் பொருட்கள் விற்பனையானது ₹1.12 கோடி அளவில் விற்பனை ஆகியுள்ளது. தமிழகத்தில் இருக்கக் கூடிய கூட்டுறவு சங்கங்கள், அதில் இருக்கக்கூடிய அங்காடிகள் மூலமாகவும் ஆவின் பொருட்களை விற்க சம்பந்தப்பட்ட துறையோடு பேசப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆவின் நிறுவனத்தில் விவசாய பெருமக்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக்காக கடன் கொடுக்கப்படுகிறது.

ஆவின் தீவனங்கள் தரம் உயர்த்தப்பட்டு மார்க்கெட்டில் மிக குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதிதாக 50 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி தொடங்கும் திட்டமும் உள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. அதை முடிந்த அளவு செய்துள்ளோம். இன்னும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். கடந்த காலத்தை ஒப்பிடும்போது ஆவின் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் வந்தாலும் ஆவினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆவினை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். நம்புகிறார்கள். மற்றப் பொருட்களை விட ஆவின் பொருட்கள் விலை குறைவு. ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தினமும் 40 லட்சம் லிட்டராக பால் கொள்முதலை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.