Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆவடி அருகே வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உடல் கருகி பலி

சென்னை: வீட்டுக்குள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து, 4 பேர் பலியாயினர். ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை, விவசாயி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(51), பூ வியாபாரியான இவருக்கு ஹேமலதா (28) என்ற மகளும், விஜய் (25), அஜய் (23) என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில், விஜய் மட்டும் ஆறுமுகத்துடன் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டி கொண்டே திருவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்விற்கு வெடிப்பதற்கான நாட்டு வெடிகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகள் நேற்று திடீரென வெடித்து சிதறின. பலத்த சத்தத்துடன் வெடித்ததில் வீடு இடிந்து விழுந்து தீப்பற்றியது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினரை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைத்த பின்னர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், இரண்டு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நீண்ட போரட்டத்திற்கு பின்பு உள்ளே இடிபாடுகளில் சிக்கிய மேலும் இரண்டு உடல்களை மீட்டனர். விசாரணையில், தீபாவளி பண்டிகைக்காக நாட்டு வெடி வாங்க வந்த திருநின்றவூரை சேர்ந்த யாசின் (25) மற்றும் சுனில் பிரகாஷ் (23) ஆகியோர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மீட்கப்பட்ட இரு உடல்களின் அடையாளம் காணப்படவில்லை. தொடர்ந்து இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உயிரிழந்துள்ளார்களா என்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி கண்டறிந்து வருகின்றனர்.

அதேபோல், உயிரிழந்த 4 பேரில் 2 உடல்கள் அடையாளம் கண்ட நிலையில் மீதமுள்ள இரண்டு உடல்களில் ஆணா பெண்ணா என்பது தெரியவில்லை. 4 உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடல் கூறு ஆய்விற்காக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனிடையே பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட விஜய் வெடி மருந்துகளை வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து பட்டாசு தயாரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்டாசுகளை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று எதிர்பாராதவிதமாக தீப்பற்றி பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. வீட்டில் ஏறக்குறைய 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், வெடி மருந்துகளும் இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்து குறித்து நேரில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆய்வு செய்தார். மேலும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

விஜய் உண்மையில் திருவிழா மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே நாட்டு வெடி தயார் செய்து வந்தாரா அல்லது சட்ட விரோத செயலில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். எந்த ஒரு உரிமமும் இல்லாமல் விஜய் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட விஜய் விபத்தில் சிக்கி உயிர் இழந்தாரா அல்லது தப்பி ஓடினாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

* 20 நிமிடம் தொடர்ந்து வெடி சத்தம்

அதே பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் கூறுகையில், ‘‘மதியம் குழந்தைக்கு பால் ஊட்டி கொண்டிருந்தேன். அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது கரும்புகை சூழ்ந்து இருந்தது. அதேபோல், வெடி சத்தம் தொடர்ந்து இருபது நிமிடங்கள் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போனோம்’’ என்றார்.

* திடீர் திடீரென வெடிக்கும் குண்டுகள்

மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் கூறுகையில், ‘‘வெடி விபத்தில் இதுவரை நான்கு நபர்கள் உயிர் இழந்துள்ளனர். தற்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நாட்டு வெடிகுண்டு என்பதால் திடீர் திடீரென்று சத்தத்துடன் வெடிக்கிறது. தீயணைப்பு பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.