* ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பொதுமக்கள்
* மீண்டும் திறக்க நடவடிக்ைக எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு
ஆவடி: ஆவடி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் முன்னரிவிப்பு இல்லாமல் திடீரென மூடப்பட்டதால் தினமும் பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆதார் மையத்தை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆவடி காமராஜ் நகரில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சமூக கூடம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக ஒருபுறம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் அங்கன்வாடி மையம் மற்றும் மற்றொரு புறம் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தன. இதில், ஆவடி சுற்று வட்டார பகுதியில் ஆதார் சேவை மையம் ஆவடி தாலுகா அலுவலகம் மற்றும் காமராஜர் நகரில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மட்டும் செயல்பட்டு வந்தன. இங்கு, முகவரி, தெரு, பெயர் திருத்தம் மற்றும் புதிதாக ஆதர் எடுத்தல் உள்ளிட்டவற்றிக்காக பொதுமக்கள் இங்கு வந்து பயன் பெற்று சென்றனர்.
இந்நிலையில், சமுதாயக் கட்டிடத்தை இடித்து புதுப்பிக்க வேண்டும் என கூறி திடீரென்று அங்கன்வாடியை மட்டும் அருகில் உள்ள தனியார் வீட்டில் மாற்றி விட்டனர். மேலும், ஆதார் சேவை மையம் இடம் ஒதுக்கப்படாததால் கடந்த 3ம் தேதி முதல் திடீர் மூடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஆதார் மையம் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆதார் மையம் எந்த ஒரு முன்னரிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டதால் நாள்தோறும் சுமார் 50க்கும் ேமற்பட்டோர் தினசரி வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால், ஆவடி தாலுகா அலுவலக வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் சேவையை பயன்படுத்துவதற்காக வரும் பொது மக்களால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, காமராஜர் நகர் பொதுமக்களின் நலனை கருதி ஆதார் மையத்திற்காக நிரந்தரமாக இடத்தை காமராஜர் நகர் பகுதியில் ஒதுக்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
ஆவடி ராமகிருஷ்ணாபுரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த ஆதார்- சேவை மையத்தை திடீர் என முடிவிட்டனர். இதனால், சிறுவர்கள், முதியோர் ஆதார் சேவையினை பெற எளிதாக இருந்தது. தற்போது, திடீர் என முடியதால் சிறுவர்களையும், முதியேரையும் ஆதார் மைய இருக்கிறது என வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆதார் மையம் இல்லாதாதல், ஆவடி தாலுகா ஆதார் மையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதால் தினமும் சென்ற அலையே வேண்டியுள்ளது. இதனால், தேவையில்லாத அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் ஆதார் சேவை மையத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

