இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி, கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 40.2 சதவீதம் அதிகரித்தள்ளது. இவற்றில் பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்து 57,585 ஆகவும், டூவீலர்கள் ஏற்றுமதி 46.2 சதவீதம் அதிகரித்து 380,528 ஆகவும், மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்து 23,859 ஆகவும் உள்ளது. இதே மாதத்தில் உள்நாட்டில் வாகன விற்பனை 1.6 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது.
கடந்த மாதத்தில் மட்டுமல்ல, தொடர்ந்து சில ஆண்டுகளாகவே இந்தியாவில் இருந்து வாகனங்கள் ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டில் வாகன ஏற்றுமதியில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதலிடத்தில் சீனா உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் எண்ணிக்கையில் ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கடந்த 2022ம் ஆண்டில் 3.44 லட்சம் கார்கள் என்ற இடைவெளி, 2023ல் 1.15 லட்சம் கார்களாக குறைந்து விட்டது.
வேளாண் துறைக்குப் பிறகு அதிகமான வேலை வாய்ப்பை சேவைகள் மற்றும் உற்பத்தி துறைகள்தான் வழங்குகின்றன. ஆட்டோமொபைல் துறைக்கு இதில் கணிசமான பங்களிப்பு உண்டு. இந்த துறையில் ஏறக்குறைய 4.5 கோடிப் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதுபோல் ரூ.7.5 லட்சம் கோடியாக இருந்த இந்த துறையின் வர்த்தகம் ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் 3வது இடத்தை பிடித்துள்ள இந்தியா, சீனாவையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து விட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீத வாகன ஏற்றுமதி இலக்கு எட்டப்பட வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் இதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிகமாக தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், சிலி ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் ஏற்றுமதியாகின்றன. 2023ம் ஆண்டில் கார் ஏற்றுமதி குறித்து வெளியான புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் இருந்து ரூ.68,295 கோடி மதிப்பிலான கார்கள் ஏற்றுமதியாகின்றன. இதில் சவுதி அரேபியாவுக்கு ரூ.12,615 கோடி, தென் ஆப்ரிக்காவுக்கு ரூ.11,310 கோடி, மெக்சிகோவுக்கு ரூ.8,016 கோடி, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ரூ.5,234 கோடி, சிலிக்கு ரூ.2,617 கோடி மதிப்பிலான கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணம், பல வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இங்கு தொழிற்சாலை அமைத்ததுதான். குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதாலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. 85 நாடுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குறைந்த உற்பத்தி செலவு ஆகும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக தொழிற்சாலை என பெயரெடுத்த சீனாவுக்கு கூட 2ம் இடம்தான். இதற்கு அடுத்துதான் வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா நாடுகள் உள்ளன. அமெரிக்கா நடத்திய ஆய்விலும் முதல் மூன்று இடங்களில் இந்தியா,சீனா, வியட்நாம் உள்ளன.
இதனால்தான் பல வெளிநாட்டு வாகன நிறுவனங்களும் இந்தியாவில் தொழிற்சாலை துவங்கி, இங்கு தயாரித்து வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்கின்றன. மாருதி சுசூகி, ஹூண்டாயை தொடர்ந்து கியா நிறுவனம் அதிக கார்களை ஏற்றுமதி செய்கிறது. இந்த வரிசையில் போர்ட் மோட்டார் நிறுவனமும் தமிழகத்தில் மீண்டும் தொழிற்சாலையை துவக்கி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை, தொழில் தொடங்க சலுகைகள், உற்பத்தி செலவு குறைவு போன்ற காரணங்கள்தான் இந்தியாவை வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றுகின்றன என்கின்றனர் தொழில்துறையினர்.
* தமிழ்நாட்டின் பங்களிப்பு
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகன ஏற்றுமதி அதிகரித்துள்ளது ஒரு புறம் இருக்க, ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் கணிசமாக உள்ளது.டிவிஎஸ் மோட்டார் (ஓசூர்), பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (ஓசூர்), ராயல் என்பீல்டு, யமஹா மோட்டார்ஸ் (ஒரகடம்), ஓலா எலக்ட்ரிக் (கிருஷ்ணகிரி), ஏதர் எனர்ஜி (ஓசூர்), ஆம்பியர் எலக்ட்ரிக் (ராணிப்பேட்டை), ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (கோவை), பூம் மோட்டார்ஸ் (கோவை), ராப்டீ எனர்ஜி (சென்னை) ஆகியவை டூவீலர் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன.
இதுபோல் பயணிகள் வாகன உற்பத்தியை பொறுத்தவரை மகிந்திரா வேர்ல்டு சிட்டியில் பிஎம்டபிள்யூ , மினி கார்களும், ஸ்ரீபெரும்புதூரில் ஹுண்டாய் மோட்டார்ஸ், பிஒய்டி இந்தியா, ஒரகடத்தில் ரெனால்ட், நிசான், டட்சன், திருப்பூரில் நியூ எனர்ஜி வேகன் ஆகியவை உள்ளன. வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தி ஆலைகள் ஓசூர், ராணிப்பேட்டை, சென்னை, ஆகிய இடங்களில் உள்ளன. சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றின் மூலம் கடந்த 2022-23 நிதியாண்டில் 3,80,000 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது முந்தைய நிதியாண்டை விட 24% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் தொழில்துறைக்கான உள் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் இங்கு வாகன உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. உதாரணமாக தூத்துக்குடியில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் வெளிநாடுகளுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை முதன் முதலாக தமிழகத்தில் இருந்து துவக்க இருக்கிறது. மேற்கு ஆசியா, மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு, நாட்டின் முக்கிய வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக திகழ்கிறது.
* நாலுகால் பாய்ச்சலில் டூவீலர்கள்
இந்திய டூவீலர்களுக்கு வெளிநாடுகளில் படு கிராக்கி உள்ளது. சீனா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்கு தள்ளி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது இந்திய டூவீலர்கள் ஏற்றுமதி. ஆப்ரிக்கர்கள் சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் உற்பத்தியான டூவீலர்களை அதிகம் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்காவின் டூவீலர் சந்தையில் 50 சதவீதத்தை, இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், ராயல் என்பீல்டு நிறுவனங்கள் பிடித்திருக்கின்றன. நம்பகத்தன்மை, நீடித்த உழைப்புக்கு உத்தரவாதம்தான் இந்திய டூவீலர்களுக்கு கிராக்கி ஏற்பட முக்கிய காரணம்.
நைஜீரியா, கென்யா, உகாண்டா, கானா நாடுகளில் இந்திய டூவீலர்களை பெரும்பான்மையானோர் விரும்புகின்றனர். இதனால்தான் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் ஆப்ரிக்காவில் டூவீலர் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளனர். இதனால் ஆப்ரிக்க நாட்டவருக்கும் வேலைவாய்பு கிடைத்துள்ளது. டூவீலர் பழுது பராமரிப்புஈக்கு ஆப்ரிக்கர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது ரூ.69,600 கோடியாக உள்ள ஆப்ரிக்க டூவீலர்கள் சந்தை 2030ல் ரூ.95,700 கோடியாக உயரும் எனவும், இதில் பெரும்பான்மை இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம்தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த செலவில் உற்பத்தி, நியாயமான விலை, ஆப்ரிக்காவில் தொழிற்சாலை இருப்பதால் அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை இந்திய டூவீலர்களை ஆப்ரிக்கர்கள் விரும்ப காரணம் என கூறப்படுகிறது.