சமயபுரம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகள் கிரேசிகா(10), மகன் லிதன்ராம்(7). நேற்றுமுன்தினம் புதிய ஆட்டோ வாங்கி அதில் மகன், மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய கிரேசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் உள்ள கம்பி இடுக்கில் சிக்கியதில் ராஜ்குமாருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மகன் லிதன்ராம் தப்பினான்.மண்ணச்சநல்லூர் போலீசார் சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் ராஜ்குமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.