ஆட்டோ சங்கர் வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான எஸ்.ஐயின் பதவி உயர்வு: 3 மாதங்களில் முடிவு: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடந்த 1980களின் இறுதியில் நாட்டையே பீதிக்கு உள்ளாக்கிய சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர். இவரது வழக்கை விசாரணை செய்த உதவி ஆய்வாளர்களில் ஒருவர் எஸ். பவுன். இவர் மீது காவல்துறை 1989ல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 1999ம் ஆண்டு அவரை பதவியிறக்கம் செய்தும், பணப்பயன்களை நிறுத்தியும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து 2012ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஐ. பவுன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி எம்.சுதீர் குமார் முன்பு நடைபெற்றது. அப்போது, எஸ்.ஐ. பவுன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி,‘ஒழுங்கு நடவடிக்கை நடைமுறையில் 10 ஆண்டுகால தாமதத்திற்கு மனுதாரர் எந்த வகையிலும் பொறுப்பல்ல. இதனால், மனுதாரர் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு பெற முடியாமல் போனது,’ என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசீருதீன்,‘பல கட்டங்களில் விசாரணையில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளதால் தாமதத்திற்கு மனுதாரர் மட்டுமே பொறுப்பு. ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றிய பிறகே 2014ம் ஆண்டு மே மாதம் ஓய்வுபெற்றார்,’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,‘மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் அம்சத்திற்கு செல்ல விரும்பவில்லை. என்றாலும், அதன் தாமதத்தால், மனுதாரருக்கு ஏற்பட்ட பாரபட்சத்தை நீதிமன்றம் தான் சரிசெய்ய வேண்டும். எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று பல நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தாமததுக்கு மனுதாரர் தான் காரணம் என்கிற அரசு தரப்பு விளக்கத்தை ஏற்கமுடியாது. எனவே, பதவி உயர்வு கோரும் மனுதாரரின் கோரிக்கையை டிஜிபி பரிசீலிக்க வேண்டும். அதன்பின்னர், 3 மாதத்திற்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.