*புளியங்குடி அருகே பரிதாபம்
புளியங்குடி : புளியங்குடி அருகே மான் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து பயணி பலியானார். படுகாயமடைந்த டிரைவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புளியங்குடி அருகேயுள்ள பட்டக்குறிச்சிகிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சாத்தன் (55). இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதால் புளியங்குடி அருகேயுள்ள தலைவன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று காலை ஆட்டோவில் சென்றார்.
தலைவன்கோட்டை சிஎம்எஸ்கோயில் தெருவை சேர்ந்த திருவாய்மொழி (65) என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார். பட்டகுறிச்சி அருகே மலை சூழ்ந்த பரம்பு பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென மான் ஒன்று சாலையை கடக்க முயன்றது. இதனால் மான் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தலைகீழாக கவிழந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சாத்தன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார். டிரைவர் திருவாய்மொழி படுகாயமடைந்தார். தகவலின் பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாத்தன் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த டிரைவர் திருவாய்மொழி, புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.