கூடலூர் : கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில் பிரதான சாலை வழியாக வந்த யானை, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை விரட்டியுள்ளது. இதில், ஆட்டோ பள்ளத்தில் இறங்கி மின்கம்பத்தில் மோதி நின்றது. பாடந்துறை பகுதியை சேர்ந்த அசரப்அலி என்பவர் நேற்று காலை 7 மணி அளவில் தனது குழந்தைகளுடன் மதரஸாவிற்கு செல்வதற்காக ஆட்டோவில் கூடலூர்- தேவர்சோலை சாலையில் வந்துள்ளார்.
அங்குள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தை ஒட்டி வந்தபோது திடீரென சாலையில் வந்த யானை ஒன்று, ஆட்டோவை விரட்டி உள்ளது. இதில் பயந்துபோன அசரப்அலி, ஆட்டோவை ஒரு பக்கமாக ஒதுக்கி ஓட்டியபோது, பள்ளத்தில் இறங்கிய ஆட்டோ அங்குள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது.
இதனைத்தொடர்ந்து அங்குள்ளவர்கள் கூச்சல் போடவே யானை அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தேயிலைத்தோட்டம் வழியாக சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், யானைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தி வனப்பணியாளர்களை அப்பகுதியில் அதிகப்படுத்தி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பாடந்துறை சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருவதால், யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கவும், ஊருக்குள் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.