‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்: 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்; ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
சென்னை: எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும், அதிமுக பொதுக்குழுவில் ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள் என்றும் 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் ‘டான்’ போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும். அதிமுக பொதுக்குழுவில், ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜ நிராகரித்துவிட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்திருப்பது பச்சைத் துண்டு அணிந்து கொண்டு பச்சை துரோகம் செய்யும் போலி விவசாயி பழனிசாமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு 11.19 சதவீதம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. பாஜவுடன் கூட்டணி வைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்.


