அடிலெய்ட்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றதில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து 2 ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 73, ஸ்ரேயஸ் ஐயர் 61, அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அடம் ஜம்பா 4, சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 46.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ ஷார்ட் 74, கூப்பர் கோனோலி 61, மிட்சல் ஓவன் 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.