பாசெட்டெர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி பாசெட்டெரில் இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன் குவித்தது. கேப்டன் ஷாய் ஹோப் நாட் அவுட்டாக 57 பந்தில் 102 ரன் அடித்தார். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ரன் எடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் 20, கேப்டன் மிட்செல் மார்ஷ் 22, ஜோஸ் இல்லிங்ஸ் 15, கேமரூன் கிரீன் 11 ரன்னில் அவுட் ஆகினர். பின்னர் வந்த டிம்டேவிட் 37 பந்தில் 6 பவுண்டரி, 11 சிக்சருடன் நாட் அவுட்டாக 103, மிட்செல் ஓவன் 16 பந்தில் 36 ரன் விளாசினர். இதனால் 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன் எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 3-0 என தொடரையும் கைப்பற்றியது. டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 4வது போட்டி நாளை நடக்கிறது.
3வது அதிவேக சதம்
37 பந்தில் சதம் அடித்த டேவிட் டேவிட், சர்வதேச டி.20 போட்டிகளில் குறைந்த பந்தில் சதம் அடித்த 3வது வீரர் சாதனையை படைத்தார். ரோகித்சர்மா, டேவிட் மில்லர் தலா 35 பந்தில் சதம் அடித்துள்ளனர். மேலும் குறைந்த பந்தில் சதம் அடித்த ஆஸி. வீரர் என்ற இல்லிங்ஸ் சாதனையை (43பந்து) முறியடித்தார்.