மும்பை: 13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி லீக்ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதின. மழைகாரணமாக இந்த போட்டி பாதியில் ரத்தானது. 27ஓவராக குறைக்கப்பட்டுநடந்த இந்தபோட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய இந்தியா8.4ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன் எடுத்திருந்தபோது கனமழை கொட்டியதால் போட்டி கைவிடப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேறின.நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் லீக்கில் 2வது இடம்பிடித்த இங்கிலாந்து, 3வது இடம்பிடித்த தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. வரும் 30ம் தேதி வியாழக்கிழமை மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதியில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இதனிடையே நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின்துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் பீல்டிங் செய்தபோது முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் மைதானத்தை விட்டு வெளியேற அவர் பின்னர் களம் இறங்க வில்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான். மருத்துவ குழுவினர் அவரின் காயத்தின் தன்மையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வெற்றியை தொடர்வோம் : இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் நேற்று போட்டி ரத்தான பின்னர் அளித்த பேட்டி: இன்று நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பானது. நிறைய தெளிவு இருந்தது. பிரதிகாவை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது, அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். இது (அரையிறுதி) எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். லீக்கில் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், அனைவரும் பங்களித்துள்ளனர். அதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இன்று ராதா விளையாடிய விதம் அடுத்த ஆட்டத்திற்கு எங்களுக்கு மற்றொரு விருப்பத்தைத் தருகிறது, என்றார்.
