Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு துறையில் புதிய பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்மூலம், விஐடி சென்னையிலிருந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) பட்டம், டீகின் பல்கலைக்கழகத்திலிருந்து இளநிலை சைபர் பாதுகாப்பு பட்டம் ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளை மாணவர்கள் கற்க முடியும். மாணவர்கள் தங்கள் படிப்பை முதலில் விஐடி சென்னையில் தொடங்கி, கணினி அறிவியல், நெட்வொர்க் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு போன்ற அடிப்படைத் திறன்களை கற்றுக்கொள்வார்கள்.

பின்னர், டீகின் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட பாடப்பிரிவுகள் மற்றும் ஆய்வுகள் மூலம் டிஜிட்டல் பொரென்ஸிக்ஸ், சைபர் பாதுகாப்பு நிர்வாகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறுவார்கள். இந்த புதிய பட்டப்படிப்பு, உலகத் தரத்திற்கேற்ப சைபர் பாதுகாப்பு துறையில் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனுள்ள, தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் கட்டுமான மேலாண்மை துறைகளில் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவற்றில், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வடிவமைப்பு, மெகாட்ரானிக்ஸ், தரவுத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கட்டுமான மேலாண்மை உள்ளிட்ட பல முக்கியமான துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், `ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட பலவற்றில் டீக்கின் பல்கலைக்கழகத்துடன் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. தற்போது, ‘சைபர் பாதுகாப்பு’ துறையில் புதிய பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. இதன் மூலம், ஒரே துறையில் இரண்டு பட்டங்களைப் பெறும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதுடன், அவர்கள் தாங்கள் சார்ந்த தொழில் துறைகளில் சிறந்து விளங்க உதவும்’ என்றார். டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பாஸ்கரன் பேசும்போது, `தற்போது அறிமுகப்பட்டுள்ள புதிய பட்டப்படிப்பினால் உலகை தொழில்நுட்ப ரீதியில் வழிநடத்த திறன் மிக்க சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.