இங்கி.க்கு இலக்கு 350
பெக்கென்ஹாம்: இங்கிலாந்தில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 540 ரன்னும், இங்கிலாந்து 439 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து, 4ம் நாளில் இந்தியா 2வது இன்னிங்சில் 248 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அதையடுத்து 350 ரன் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சை துவக்கியது. 16 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழந்து 70 ரன் எடுத்திருந்தது.
முதல் ஓடிஐ இன்று
சவுத்தாம்டன்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதலில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி, 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. முதல் ஆட்டம் இன்று சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. 2வது ஆட்டம் ஜூலை 19ம் தேதி லண்டனிலும், 3வது ஆட்டம் ஜூலை 22ம் தேதி செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரிலும் நடைபெற உள்ளன.
தோல்வியின் பிடியில் இலங்கை
டார்வின்: ஆஸ்திரேலியா-இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 272, ஆஸி 486 ரன் எடுத்திருந்தன. அதனையடுத்து இலங்கை 2வது இன்னிங்சை நேற்று முன்தினம் தொடங்கியது. ஆட்டத்தின் 3வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்தது. 165 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை 4வது நாளான இன்று இலங்கை தொடர உள்ளது.
பெங்களூருவில் பயிற்சி ஆட்டம்
புதுடெல்லி: ஐசிசி பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி செப்.30ம் தேதி முதல் நவ.2ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதையொட்டி, செப்.25ம் தேதி முதல் செப்.28ம் தேதி வரை பெங்களூரு, கொழும்பு நகரங்களில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்திய வீராங்கனைகள் தங்கள் பயிற்சி ஆட்டங்களில் செப்.25ம் தேதி இங்கிலாந்தையும், செப் 27ம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கின்றனர்.