லக்னோ: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இன்று மோதும் இந்திய அணி கேப்டனாக, ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக, துருவ் ஜுரெல் செயல்பட உள்ளார். ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று துவங்குகிறது. இந்நிலையில், முதல் போட்டியின்போது இந்தியா ஏ அணிக்கு தலைமை தாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், சொந்த வேலை காரணமாக மும்பை புறப்பட்டு சென்றார்.
அதனால், முதல் போட்டிக்கு துணை கேப்டனாக இருந்தவரும், விக்கெட் கீப்பருமான துருவ் ஜுரெல், 2வது போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் துருவ் ஜுரெல் அபாரமாக ஆடி, 140 ரன்கள் குவித்தார். அதே சமயம், ஷ்ரேயாஸ் ஐயர், 13 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் ஆஸி ஏ அணி 532 ரன் குவிக்க, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா ஏ அணி 531 ரன் எடுப்பதற்கு, துருவ் ஜுரெலின் 140 ரன் முக்கிய காரணமாக அமைந்தது. 2வது டெஸ்டுக்கு பின்னர், வரும் 30ம் தேதி முதல் இந்த இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.