சிட்னி: ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் நேற்று, நட்சத்திர வீரர் லக்சயா சென் உட்பட 5 இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், தைவான் வீரர் சு லி யாங் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் அற்புதமாக ஆடிய சென், 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் காந்த் கிடாம்பி, தைவான் வீரர் லீ சியா ஹவோ மோதினர். முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றியதால் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக காணப்பட்டது. கடைசியில் அந்த செட்டை கிடாம்பி கைப்பற்றினார்.
அதனால், 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி - கனடா வீரர் சாம் யுவான் மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆயுஷ், 21-11, 21-15 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு போட்டியில் டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹனசெனை, இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி வென்றார். மற்றொரு போட்டியில் இந்தோனேஷியா வீரர் யோஹனெஸ் சாட் மார்செலினோவை, இந்திய வீரர் எச்.எஸ்.பிரன்னாய் போராடி வென்றார். நேற்று மோதிய இந்திய வீரர்களில் கிரண் ஜார்ஜ் மட்டும், ஜப்பான் வீரர் நிஷிமோடோவிடம் தோல்வியை தழுவினார்.


