சிட்னி: ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி இணை அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை, தைவானை சேர்ந்த கே.சி.சாங், போ லீ வெய் இணையுடன் மோதியது.
முதல் செட்டில் இரு இணையரும் விட்டுக் கொடுக்காமல் துடிப்புடன் ஆடியதால் இழுபறி காணப்பட்டது. கடைசியில் அந்த செட்டை 25-23 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய இணை வசப்படுத்தியது. தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இந்திய வீரர்கள் அட்டகாசமாக ஆடி தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அந்த செட்டை அவர்கள், 21-16 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினர். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய இந்திய வீரர்கள் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.


