ஆஸி ஏ மகளிருடன் 2வது ஓடிஐ: மிச்சம் வச்சது ஒரு பந்து ரசிகர்களுக்கு வெற்றி விருந்து: த்ரில்லாக தொடரை கைப்பற்றிய இந்தியா
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்பேன் நகரில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸி வீராங்கனைகள் முதலில் மட்டையை சுழற்றினர். தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 91, கிம் கார்த் ஆட்டமிழக்காமல் 41, எல்லா ஹேவர்ட் 38 ரன் அடித்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேறியதால், ஆஸி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது.
அதையடுத்து 266 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய துவக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் யாஷ்டிகா பாடீயா 66, கேப்டன் ராதா யாதவ் 60 ரன் விளாசினர். அதைத் தொடர்ந்து, 8வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த தனுஜா கன்வர், பிரேமா ராவத் இருவரும் ஆஸி பந்து வீச்சை சிதறடித்தனர்.
வெற்றிக்கு 5 பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில், பிரேமா (32 ரன்) சாமர்த்தியமாக ஆடி வெற்றி இலக்கை எட்டினார். அதனால் ஒரே ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் 49.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்த இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையை உறுதி செய்ததுடன், தொடரையும் கைப்பற்றி உள்ளது.