ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் சொதப்பல்: அடுத்தடுத்த போட்டிகளில் கோஹ்லி, ரோகித் சிறப்பாக செயல்படமுடியும்: சுனில் கவாஸ்கர் நம்பிக்கை
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் விராட் கோஹ்லிக்கும், ரோகித் சர்மாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அடுத்த உலக கோப்பையில் ஆடமுடியும் என்ற நெருக்கடிக்கு இருவரும் தள்ளப்பட்டு உள்ளனர். ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (வியாழன்) அடிலெய்டில் நடக்கிறது.
இந்நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது: பெர்த் ஆடுகளத்தில் பவுன்ஸ் மிகவும் அதிகமாக இருந்தது. இத்தகைய ஆடுகளம் எப்போதுமே வீரர்களுக்கு கடினமாக இருக்கும். மேலும் சில மாதங்களாகவே சர்வதேச கிரிக்கெட் ஆடாத இரு வீரர்கள் திடீரென அதுபோன்ற மைதானத்தில் ஆடும்போது பந்துகளை எதிர்கொள்ள நிச்சயம் தடுமாறதான் செய்வார்கள். அவ்வளவு ஏன் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் கில், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களுக்கே பெர்த் ஆடுகளம் கடும் சவால்களை கொடுத்தது.
முதல் ஒருநாள் போட்டியில் நாம் தோல்வியை தழுவினாலும் நாம் உண்மையிலேயே மிகவும் சிறந்த அணி. 2வது ஒருநாள் போட்டி மற்றும் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோஹ்லியும், ரோகித் சர்மாவும் அதிக ரன்கள் அடித்தால் ரசிகர்கள் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. குறிப்பாக அவர்கள் களத்தில் அதிக நேரம் செலவிட்டு வலைப்பயிற்சியில் அதிக நேரம் பந்துகளை எதிர்கொண்டால், நிச்சயம் அவர்களால் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். இருவரும் ரன்களை குவிக்கும் பட்சத்தில், இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களை தாண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அடிலெய்ட் மைதானம் விராட் கோஹ்லிக்கு மிகவும் ராசியான மைதானம் ஆகும். இங்கு கோஹ்லி 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 244 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 61 ஆகும். மேலும் இந்த மைதானத்தில் அவர் ஒரு நாள் போட்டிகளில் 2 சதமும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம் உட்பட 537 ரன்களும் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.