Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸியுடன் 2வது ஒரு நாள் போட்டி: பழி தீர்க்க இந்தியாவுக்கு வழி கிடைக்குமா..?

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி, அடிலெய்ட் நகரில் ஓவல் மைதானத்தில் இன்று துவங்குகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவிய நிலையில், இன்று நடக்கும் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் சொதப்பிய இந்திய ஜாம்பவான் வீரர்கள் விராட் கோஹ்லியும், ரோகித் சர்மாவும், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தால் இந்தியாவின் வெற்றிக்கான வழி பிறக்கும்.

முதல் போட்டியில் இந்தியா 136 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்திய பந்து வீச்சாளர்களான முகம்மது சிராஜ், அக்சர் படேல் உள்ளிட்டோரால் பெரியளவில் எதுவும் செய்ய முடியவில்லை. 2வது போட்டியில் இந்திய பவுலர்களின் பந்து வீச்சில் உஷ்ணம் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஆஸி அணியின் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் அற்புதமாக பந்து வீசி சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர்.

ஆஸி அணியில் முதல் போட்டியில் அற்புதமாக செயல்பட்ட மேட் குனெமான், 2வது போட்டியில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, அலெக்ஸ் கேரியும் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இதற்கிடையே, 2வது போட்டிக்காக, இந்திய அணி வீரர்கள் ரோகித், விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் நேற்று முன்தினம் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 2வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது.

2வது ஓடிஐயில் ஆடும் வீரர்கள்

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, முகம்மது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கனோலி, நாதன் எலிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷனே, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.