திருச்சி: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகள், சமீபத்தில் ஆரோவில்லில் முன்மொழியப்பட்ட ட்ராம் சேவைக்கான இடத்தை ஆய்வு செய்தனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சர்வதேச நகரமான ஆரோவில்லில், முன்மொழியப்பட்ட ட்ராம் வழித்தடம் மற்றும் குறுகிய வழித்தட ரயில் அமைப்பு சேவைக்காக தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆரோவில் அறக்கட்டளை (Auroville Foundation) வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு ரயில்வேயின் (திருச்சி கோட்டம்) அதிகாரிகள், திட்ட இடங்கள் மற்றும் முன்கூட்டியே திட்டமிடல் தேவைகள் குறித்து ஒரு ஆரம்பக்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம் மற்றும் வடிவமைப்பு
ஆரோவில் அறக்கட்டளை இந்த இரண்டு சேவைகளையும் நீடித்த நிலையான போக்குவரத்துத் திட்டங்களாக (Sustainable mobility projects) உருவாக்க முன்மொழிந்துள்ளது. இதில், பொம்மை ரயில் கிண்டர்கார்டன் மண்டலத்திற்குள் (Kindergarten Zone) இயக்கப்படும். அதே சமயம், மின்சார/சோலார் ட்ராம் கிரௌன் மண்டலத்திற்கு (Crown Zone) சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரோவில்லின் வாழும் கட்டமைப்பில், குறைந்த வேகம், மாசு இல்லாத, சமூகத்தை மையமாகக் கொண்ட போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் போக்குவரத்து முனைகளாக (mobility nodes) இந்தச் சேவைகள் கருத்தாக்கம் செய்யப்பட்டுள்ளன.
குறுகிய வழித்தட ரயில் சேவை அமைப்பு
கிண்டர்கார்டன் மண்டலத்தின் வழியாக 595 மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில், 12 பெட்டிகள் கொண்ட குறுகிய வழித்தட ரயில் சேவை அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
கிரௌன் ட்ராம்வே (e-tram/solar tram)
கிரௌன் ட்ராம்வே (மின்சார ட்ராம்/சோலார் ட்ராம்) என்ற இந்தத் திட்டம், ஆரோவில்லின் உள் வளையத்தைக் குறிக்கும் கிரௌன் பகுதிக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 4.4 கி.மீ. ஆகும்.திட்டத்தின் முதற்கட்டமானது 2.355 கி.மீ. பிரிவைக் கொண்டுள்ளது. இது விரிவான பொறியியல் மற்றும் செயல்பாட்டிற்குத் தயாராக உள்ளது. இந்த ட்ராம்வே ஆனது, பூங்காக்கள், பொது இடங்கள், சேவை மையங்கள் மற்றும் சமூக மையங்களை இணைக்கும் வகையில், கிரௌன் பகுதியைச் சுற்றி தொடர்ந்து இயங்கும் ஒரு குறைந்த வேக மின்சார அல்லது சோலார் ஆற்றலில் இயங்கும் போக்குவரத்து அமைப்பாக இருக்கும் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.