மதுரை: மதுரை விராதனூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் ஆடு, மாடுகள் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். மாநாட்டு பகுதியில் 3 ஆயிரம் கிடை மாடுகள், 2 ஜல்லிக்கட்டு காளைகள், 100 ஆடுகள் உள்ளிட்டவை பட்டியில் அடைக்கப்பட்டிருந்தன. மாநாடு நடந்த இடத்தில் கனமழை பெய்ததால், மாடுகள் மழையில் நனைந்தபடி பெரும் சிரமத்திற்கு ஆளானது. மாநாட்டில், வன உரிமை அங்கீகாரச்சட்டப்படி, மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்.
மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கிடை ஆடு, கிடை மாடு, எருமை, வாத்து மேய்ப்போருக்காகத் தனியாக, தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். கிடாய் முட்டு, சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு என கால்நடை சார்ந்த பாரம்பரிய விளையாட்டுகளை தடையின்றி நடத்திட அனுமதிக்க வேண்டும், மேய்ச்சல் சமூக மக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி இலவச காப்பீட்டு திட்டம் உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் ஆடு, மாடுகள் முன்பு, கால்நடைகளே பேசுவதுபோல சீமான் பேசியதாவது: எங்கள் மூலம் பால் வேண்டும், மோர் வேண்டும், வெண்ணெய் வேண்டும், சீஸ் வேண்டும். உங்கள் உணவின் மிச்சத்தைத் தருகிற மாடுகளான நாங்கள் அற்பமல்ல. செல்வங்கள் என்பதை அறியாவிட்டால் நீங்கள் பதர்கள். ஆடு மாடு வளர்ப்பை அரசுபணி ஆக்கலாம் என்றால் சிரிக்கிறீர்கள். ஆடு, மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். ஆக. 3ம் தேதி தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு நானே செல்வேன். மேய்க்கச் சென்றவரை வனக்காவலர் தள்ளினார். அதே இடத்தில் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்வேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தேனி மேற்கு தொடர்ச்சி மலைக்கு 20 மாடுகளுடன் மேய்க்கச் சென்று தடுக்கப்பட்ட சன்னாசி என்ற மாடு மேய்ப்பவர் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டார்.