ஆக.17ம்தேதி பட்டானூரில் பாமக பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ராமதாஸ் கையெழுத்திட்டு கடிதம்
திண்டிவனம்: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் ஆக.17ம்தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பும் பணி தைலாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட உரசல் உச்சகட்டத்தில் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு செயல் தலைவராக அன்புமணி பணியாற்ற வேண்டுமென ராமதாஸ் கூறியும் அதை ஏற்காமல் தலைவராகவே தனது பணியை மேற்கொண்டு வருகிறார். அவர் உரிமை மீட்பு நடைபயணத்தை ஜூலை 25 முதல் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கு தடை போட, ராமதாஸ் சார்பில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளரிடம் கடிதம் தரப்பட்டது. எனினும் அன்புமணி நடை பயணத்தை தற்போது வரை தொடர்ந்து வருகிறார்.
இதனிடையே ஆக.17ம்தேதி பட்டானூரில் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், அன்புமணி தரப்பில் மாமல்லபுரத்தில் ஆக.9ம்தேதி பொதுக்குழு கூடுவதாக அடுத்த சில மணிநேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அன்புமணி மீது கடும் அதிருப்திக்குள்ளான ராமதாஸ், மகனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, மூத்தமகள் ஸ்ரீகாந்திமதிக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் வருகிற 17ஆம்தேதி பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தற்போதைய மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கு ராமதாஸ் கையெழுத்துடன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர் ஆகியோரின் பெயரில் அழைப்பிதழ் கடிதம் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.