Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பல ஆண்டுகளாக தணிக்கை செய்யப்படாத மாநகராட்சி கணக்குகள் ரூ.2 லட்சம் கோடியின் மர்மம் என்ன? கைகொட்டி சிரிக்கிறது குஜராத் மாடல், அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பாஜவால் முன்வைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட பிரதான விஷயங்களில் ஒன்று ‘குஜராத் மாடல்’. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் பிம்பத்தை உயர்த்தும் வகையில், குஜராத் மாடல் பிரசாரத்தை பாஜ முன்னெடுத்தது. குஜராத் மிளிர்கிறது; ஒளிர்கிறது; முன்னேறுகிறது என்றும், மோடி பிரதமரானால் இந்தியா குஜராத் போல உச்சபட்ச உயர்வுகளை எட்டும் எனவும் கூறி,நாடு முழுக்க மாய பிம்பத்தை உருவாக்கினர்.

இதுபோன்ற பல உத்திகளை பின்பற்றியதன் பலனாக பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றியது.  ஆனால், அடுத்து வந்த ஆண்டுகளில் குஜராத் பிம்பம் உடையத் தொடங்கியது. ஒன்றிய பாஜ ஆட்சியில் முதல் 5 ஆண்டுகள் முடிந்து 2வது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, 2020ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குஜராத் வந்தார். அவர் வரும் வழியில் இருந்த குடிசைகள் நீண்ட துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது அப்போது பெரும் விவாதப்பொருளாக மாறியிருந்தது.

இதுபோல், கடந்த நாடாளுமன்றத் தேர்லிலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களிலும் வாக்குத்திருட்டு முறைகேடுகள் நடந்ததும், நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் நடந்த முறைகேடுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் முன்னேற்றங்களால் அல்ல... முறைகேடுகள் செய்துதான் பாஜ ஆட்சிக்கு வந்ததா என்ற ஐயப்பாடு பலரது மனதிலும் எழுந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், மற்றொரு முறைகேடாக, குஜராத் மாநிலத்தில் 8 மாநகராட்சிகளில் பல ஆண்டுகளாக கணக்குகள் தணிக்கை செய்யப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சி அலைகளை இது ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளின் மூலம் இது அம்பலம் ஆகியுள்ளது.

அதாவது, குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர், ராஜ்ேகாட், ஜாம் நகர், பாவ்நகர், ஜுனகாத், சூரத் மற்றும் வதோதரா ஆகிய 8 ெபரிய மாநகராட்சிகளில்தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது. உள்ளூர் நிதி கணக்கு அலுவலகம் தான் இந்த விவரங்களை அளித்திருக்கிறது. இதன்படி, ரூ.2 லட்சம் கோடிக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்படவே இல்லை.  அகமதாபாத் மாநகராட்சி 2017-18 நிதியாண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதன் பிறகு கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. 2024-25 நிதியாண்டில் ரூ.12,000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2017 முதல் கடந்த நிதியாண்டு வரை மொத்தம் சுமார் ரூ.50,000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆண்டுகளுக்கான கணக்குகள் இதுவரை தணிக்கை செய்யப்படவில்லை. சூரத், வதோதராவிலும் இதே லட்சணம் தான்.

காந்தி நகர் மாநகராட்சியில் 2020-21ம் ஆண்டுக்குப் பிறகும், ராஜ்கோட் மாநகராட்சியில் 2018-19 நிதியாண்டுக்குப் பிறகும், ஜாம்நகர், பாவ் நகர் மாநகராட்சிகளில் 2019-20 நிதியாண்டுக்குப் பிறகும், சூரத் மற்றும் வதோதரா மாநகராட்சிகளில் 2017-18 நிதியாண்டுகளுக்குப் பிறகும் கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் கணக்குகளை தணிக்கை செய்து, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கான சட்ட விதிகள் இருந்தும், சிஏஜி எச்சரிக்கை விடுத்தும் இதையெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டியிருக்கின்றன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களாட்சி அமைப்பில் உள்ள நிர்வாகம், இந்த அளவுக்கு அலட்சியம் காட்ட முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் மேற்கண்ட 8 மாநகராட்சிகளிலும் சேர்த்து சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. எதிலும் வெளிப்படையான நிர்வாகம், செயல்முறைகள் என்று கூறிக் கொள்ளும் பாஜ ஆட்சியாளர்கள், மேற்கண்ட அத்துமீறல்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது வேதனைக்குரியது என, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சிக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என குஜராத் மாநிலமே சொந்தமாக விதி வகுத்தும், அதைக்கூட பாஜ அரசு கடைப்பிடிக்கவில்லை. மாநகராட்சியின் இந்த செயல்பாடுகளை கேள்வி கேட்காமல் பாஜ தலைமையிலான குஜராத் ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை. அப்படியானால், மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளை மறைக்க ஆட்சியாளர்கள் உடந்தையாக இருந்தார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

குஜராத் உள்ளூர் நிதி தணிக்கை சட்ட விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். இந்த விதி பின்பற்றப்பட்டதை அரசும் உறுதி செய்யவில்லை. வெளிப்படை நிர்வாகம் என்பது, ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதைக்கூட பாஜவினர் காலில் போட்டு மிதித்துள்ளனர். தங்கள் வரிப்பணம் எப்படிப் பயன்படுத்தப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இந்த உரிமையும் காக்கப்படவில்லை.

ரூ.2 லட்சம் கோடி என்னவானது என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது. சாலைகள், தண்ணீர் வசதி, வீட்டு வசதி, தூய்மை, சுகாதாரப்பணிகள் போன்றவற்றை மேம்படுத்த மேற்கண்ட தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த பணிகள் செய்யப்பட்டனவா என்று கூட மக்கள் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு விஷயத்தை மூடி மறைத்துள்ளது பாஜ நிர்வாகம் என்பது ஜனநாயகத்தை பாஜ ஆட்சியாளர்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றனர் என்பதற்குச் சான்று என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

* அம்பலத்துக்கு வந்த அவலங்கள்

* மோசமான உள்கட்டமைப்புகள் மட்டுமல்ல... ஏற்கனவே இருக்கும் வசதிகளைக் கூட பாதுகாப்பாக வைக்க முடியாமல், புதிய வசதிகளை ஏற்படுத்தாமல் மக்களை பாஜ தலைமையிலான குஜராத் அரசு படு மோசமான நிலையில் வைத்துள்ளது என்பதை பல தரவுகள் மெய்ப்பித்து வருகின்றன.

* வதோதராவில் கடந்த ஜூலை மாதம் மாகிசாகர் நதி மீது கட்டப்பட்டிருந்த காம்பிரியா பாலம் இடிந்து விழுந்தது. இதில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

* 2022ம் ஆண்டு அக்டோபரில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 130 பேர் கொல்லப்பட்டனர். புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலத்தின் உறுதித்தன்மையை சோதிக்காமல், தகுதிச் சான்று பெறாமல் பாலம் திறக்கப்பட்டது தெரியவந்தது.

* 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வாத்வாவில் அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்துக்காக பாலம் அமைத்தபோது கிர்டர்கள் இடிந்து விழுந்தது.

* காம்பிரியா பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள 1,800 பாலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்பிறகு மோசமான நிலையில் இருந்த 20 பாலங்கள் மூடப்பட்டன. 113 பாலங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

* கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தில் 16 பாலங்கள் இடிந்து விழுந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதன்மூலம், மக்கள் பணம் எந்த அளவுக்கு நியாயமான முறையில் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த வரிசையில், மாநகராட்சியில் மக்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு நிதி முறையாக பயன்படுத்தப்படாததால் தான் கணக்குகளை தணிக்கை செய்யாமல் மூடி மறைத்துள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* ஆர்டிஐயில் தகவல் கேட்டால் கொலை

ஆர்டிஐ சட்டத்தின் 20வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், குஜராத்தில் ஆர்டிஐயில் விண்ணப்பித்த பல ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் அச்சுறுத்தல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர். பலர் வன்முறை தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், குஜராத்தில் ஆர்டிஐ-யை பயன்படுத்தவே மக்கள் அஞ்சுகிறார்கள். ஊழல் அல்லது முறைகேடுகளை அம்பலப்படுத்தும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே சட்டத்தின் நோக்கம், ஆனால் அரசின் அலட்சியப்போக்கால், அந்த பாதுகாப்பு வெற்று வார்த்தைகளாகவே உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

* குஜராத்தில் நடந்த சமீபத்திய முறைகேடுகள்

* குஜராத்தில் தாகோத் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் முறைகேடு நடந்துள்ளது. செய்யாத திட்டங்களை செய்ததாக காட்டி மோசடி செய்தள்ளனர்.இது தொடர்பாக குஜராத் அமைச்சர் பச்சுபாய் காபத்தின் 2 மகன்கள் கைதாகியுள்ளனர். அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது.

* வீடு தோறும் குடிநீர் சப்ளையை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்தது கடந்த ஆகஸ்ட் மாதம் அம்பலமானது. மாகிஸ்சாகர் மாவட்டத்தில் 620 கிராமங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் ரூ.13.44 கோடி சுருட்டப்பட்டுள்ளது. 2019 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இது அரங்கேறியுள்ளது. போலியான பில்கள் தயாரித்தும், திட்ட செலவுத் தொகையை அதிகரித்து காட்டியும் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு அதிகாரிகள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளனர்.

* அப்பட்டமான சட்டவிதி மீறல்

* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளும் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று குஜராத் உள்ளூர் நிதி தணிக்கை சட்டம் - 1963, பிரிவு 4 வலியுறுத்துகிறது.

* சிஏஜி வழிகாட்டுதலின்படி மாநகராட்சி கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என 11வது ஒன்றிய நிதிக் கமிஷன் (2000-05) பரிந்துரைத்துள்ளது.

* 2005ம் ஆண்டு மே 6ம் தேதி நிதித்துறை வெளியிட்ட தீர்மானத்தில், உள்ளாட்சி கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பது சட்ட விதி என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இது பின்னர் 2011ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சுற்றறிக்கையாக விடப்பட்டது.

* குஜராத் உள்ளாட்சிகளில் கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்படுவதில்லை என சிஏஜி 2009ம் ஆண்டில் சுட்டிக்காட்டி, எச்சரிக்கை விடுத்தது. முறையாக தணிக்கை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

* குஜராத் மாநகராட்சி அமைப்புகள் சட்டம் 1949-ல் பிரிவு 108ஏ என்பது 2011ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இருப்பினும், இந்த சட்ட விதி நடைமுறைப்படுத்தப்படவில்லை.

* நிராகரிக்கப்படும் ஆர்டிஐ விண்ணப்பங்கள் வெளிப்படையா...அப்படீன்னா...?

* தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகம் செய்து 20வது ஆண்டையொட்டி சமீபத்தில் ஒரு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) 2.1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டிருந்த போதிலும், போதுமான தகவல்கள் தரப்படவில்லை. மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் மாநிலத்தில் பாதுகாப்பின்றி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆர்டிஐ விண்ணப்பங்களில் 58 சதவீதம் கல்வி, உள்துறை மற்றும் வருவாய்த் துறைகளில் சமர்ப்பிக்கப்பட்டவை.

* குஜராத் மாநில தகவல் ஆணையம் கடந்த 2005 மே முதல் 1.37 லட்சத்திற்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் புகார்களை கையாண்டுள்ளது. 1,26,540 விண்ணப்பங்களை பரிசீலித்துள்ளது. 1,248 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த பத்திரிகையாளரோ அல்லது என்ஜிஓ உறுப்பினரோ தகவல் ஆணையராக நியமிக்கப்படவில்லை. இதனால் குஜராத் மாநிலத்தில் ஆர்டிஐ செயல்முறை அதிகார மையம் கொண்டதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

* விதிகளுக்கு இணங்கவில்லை என்பதற்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் மிகக் குறைவு. 1,284 பொது தகவல் அதிகாரிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளில் ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தீர்வு காணப்பட்டதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். வெறும் 74 பொது தகவல் அதிகாரிகள் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.

* மேலும், 26 துறைகளில் 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தணிக்கையில், 35% துறைகள் மட்டுமே தங்களிடம் உள்ள தரவுகளை புதுப்பித்துள்ளன. 38% துறைகளில் உள்ள தரவுகள் எதுவும் புதுப்பிக்கப்படவில்லை. தகவல்களை பதிவேற்றம் செய்வதற்காக உள்ள வலைதளங்களில் 8 சதவீதம் செயல்படாதவை. உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், நகர்ப்புற மேம்பாடு மற்றும் சட்டத் துறைகளில் 10 ஆண்டு பழமையான கோப்புகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், குஜராத் மாநிலத்தின் டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை மோசமாக உள்ளது.