புதுடெல்லி: இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் ஆவர். கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக வெங்கடரமணி, அரசியலமைப்பின் 76வது பிரிவின் கீழ் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். கடந்த 1950ல் புதுவையில் பிறந்த வெங்கட்ராமணி 1977ல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து தனது பணியை தொடங்கினார். இதில் முன்னாள் அட்டார்னி ஜெனரலாக இருந்த கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டு நிறைவடைந்த போது வெங்கட்ரமணி அட்டர்னி ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இவரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த சூழலில், மேலும் 2 ஆண்டுகள் பதவி காலத்தை நீட்டித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டு ஆண்டுகால பதவி நீட்டிப்பு அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027 செப்டம்பர் 30 வரை ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக வெங்கடரமணி பதவி வகிப்பார்.