சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடத்தப்பட்ட வெட்கக் கேடான தாக்குதல் என்பது நமது ஜனநாயகத்தில் நீதித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். இது மிக கடுமையான கண்டனத்துக்குரிய செயல். அமைதியாகவும் கருணையோடும் பெருந்தன்மையோடும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதற்கு எதிர்வினையாற்றியது நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது.
எனினும், இத்தாக்குதலை நாம் சாதாரணமானதாக கருதலாகாது. தாக்குதலை நடத்தியவர் அதற்கு கூறிய காரணம், நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை - ஆதிக்க மனப்பான்மை எந்த அளவுக்கு ஆழமாக பதிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரு சமூகமாக, நமது மக்களாட்சியின் நிறுவனங்களை மதிக்கும், பாதுகாக்கும் பண்பையும்; நடத்தையில் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் போக்கையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.