தர்மபுரி: தர்மபுரியில், கல்லூரி மாணவனை தனி அறையில் அடைத்து தாக்குதல் நடத்தி அதை செல்போனில் வீடியோ பதிவு செய்த, 17 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாமது மலை பகுதியை சேர்ந்தவர் 22வயதுடைய மாணவன் தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள அம்பேத்கர் மாணவர் அரசு விடுதியில் தங்கி, அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கணக்கியல் 3 ம்ஆண்டு படித்து வருகிறார். இவர் மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கல்லூரி முடித்து மாலை வேலையில், அப்பகுதியில் உள்ள பேக்கரியில் பகுதி நேர ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, இவர் தங்கியிருந்த அறையில் இருந்த சக மாணவர் ஒருவர், தனது செல்போனின் சார்ஜரை 22வயதுடைய கல்லூரி மாணவன் திருடிவிட்டதாக, தனது சக நண்பர்களிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து திருட்டு புகார் கூறிய மாணவனுக்கு ஆதரவாக விடுதியில் இருந்த 19 மாணவர்கள் சேர்ந்து, 22வயதுடைய மாணவனை தனி அறையில் அடைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
மேலும், அவரை துன்புறுத்துவதை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அறையில் இருந்த கல்லூரி மாணவன் ஒரு வழியாக, மாணவர்களின் பிடியில் இருந்து அங்கிருந்து தப்பி, அதியமான் கோட்டை காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு, விடுதியில், தனி அறையில் அடைத்து தன்னை சித்ரவதை செய்ததாக புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதியில் தங்கியிருந்த 17 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வன்கெடுமை வழக்கு தொடர்பான கைது விவகாரம் என்பதால், மேற்கொண்டு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க விடுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.