காசா: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை மையமாக கொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையிலான போர் 2 ஆண்டுகளையும் கடந்து நீடித்து வருகிறது. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டினால் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதை மீறி செயல்பட்டதாக கூறி, ஹமாஸ் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனிடையே, ராபா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 5 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக, நேற்று நள்ளிரவில் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எங்கள் படைகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எங்கள் கொள்கை தெளிவானது. இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களை தாக்குவதை பொறுத்து கொள்ள மாட்டோம். அதற்கேற்ற பதிலடி இருக்கும். இன்று ராபாவில் நடந்த தாக்குதலில் காயமடைந்த நம் வீரர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

