புதுடெல்லி: மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் 29% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக, ‘பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989’ நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் 2015ல் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்தச் சட்டங்களை மாநிலங்களில் திறம்படச் செயல்படுத்த ஒன்றிய அரசு நிதியுதவி அளிப்பதுடன், பழங்குடியின மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறது.
இருந்தபோதிலும், இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள், அமைப்பு ரீதியான சிக்கல்கள் மற்றும் குறைந்த தண்டனை விகிதங்கள் காரணமாக, பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) 2024ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டை விட 29% அதிகரித்துள்ளது. குறிப்பாக, மணிப்பூர் மாநிலத்தில் தான் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடியினரான குக்கி-சோமி சமூகத்தினருக்கும் இடையே கடுமையான இனக்கலவரம் நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தின்போது நிகழ்ந்த கொலை, பாலியல் வன்கொடுமை, தாக்குதல் போன்ற கொடூர சம்பவங்களே, அம்மாநிலத்தில் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.